கொல்கத்தா – லக்னோ அணிகளுக்கிடையில் அரையிறுதிக்கு தகுதி காணும் போட்டி இன்று

மும்பை டி.ஒய் பட்டீல் மைதானத்தில் இன்று (18) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் IPL 66 ஆவது லீக் போட்டியில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் விளையாடுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 10 அணிகளுக்கும் தலா 13 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் இன்னும் ஒரு போட்டியில் விளையாடவுள்ளது.

லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி; சுற்றுக்கு தகுதி பெறும். குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே தற்பொழுது அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி 20 புள்ளியுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற 3 இடங்களுக்கான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 7 அணிகள் உள்ளன.

இதில் ராஜஸ்தானும், லக்னோவும் கிட்டத்தட்ட தகுதி பெறும் நிலையில் உள்ளன. இரு அணிகளும் தலா 16 புள்ளிகளுடன் இருக்கின்றன. கடைசி போட்டிகளில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் முன்னேறும்.

ராஜஸ்தான் அணி சி.எஸ்.கே.வையும், லக்னோ அணி கொல்கத்தவையும் கடைசி ஆட்டத்தில் எதிர் கொள்ளவுள்ளன. இந்த ஆட்டங்களில் தோற்றாலும் அந்த அணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. அதே நேரத்தில் மிகவும் மோசமாக தோற்றால் மட்டுமே தகுதி பெற முடியாத நிலை ஏற்படும். ராஜஸ்தானும், லக்னோவும் ஓட்ட எண்ணிக்கையில் நல்ல நிலையில் உள்ளன.

டெல்லி, பெங்களூரு அணிகள் 14 புள்ளிகளுடனும், கொல்கத்தா, பஞ்சாப், ஐதராபாத், அணிகள் 12 புள்ளிகளுடனும் உள்ளன.


டெல்லி கடைசி ஆட்டத்தில் மும்பையையும் (21 ஆம் திகதி), பெங்களூர் அணி குஜராத்தையும் (நாளை 19) சந்திக்கின்றன. டெல்லி, பெங்களூர் அணிகளில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்றாலே கொல்கத்தா, பஞ்சாப், ஐதராபாத் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறும்.

டெல்லி அணி ஓட்ட எண்ணிக்கையில் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. பெங்களூர் அணி ஓட்ட எண்ணிக்கையில் மோசமாக இருப்பதால் அந்த அணி கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே கொல்கத்தா அணி 14 புள்ளியுடன் அரையிறுதி சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

லக்னோ அணி கொல்கத்தாவை மீண்டும் வீழ்த்தி 9ஆவது வெற்றியுடன் அரையிறுதி சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்யும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி இதற்கு முன்பு 75 ஓட்டங்களில் கொல்கத்தாவை தோற்கடித்து இருந்தது.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 4 தடவை ஐ.பி.எல்.கிண்ணத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.