கட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்

Supreme court release Perarivalan from Rajiv assassination case highlights: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க கோரி அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். 7 பேரையும் விடுவிக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தீர்மானத்தின் மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றம் விடுதலை அளித்து உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். கோபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளன் உடைய நீண்ட நாள் சிறைவாசம், சிறை மற்றும் பரோலில் நன்னடத்தை, அவருக்கு இருக்கக்கூடிய நீண்ட நாள் நோய், அவர் பெற்ற கல்வித் தகுதிகள், கவர்னரின் இரண்டரை ஆண்டு தாமதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் தனது சிறப்பு அதிகாரமான 142ஐ பயன்படுத்தி விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

மேலும் ”இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை முடிவு மீது கவர்னர் முடிவெடுக்காமல் இருந்ததை ஏற்க முடியாது. மேலும் தற்போதைய நிலையில் இத்தனை ஆண்டுகள் பேரறிவாளன் சிறையில் இருந்ததை முழுமையான தண்டனை அனுபவித்ததாக கருதி தற்போது ஜாமீனில் உள்ள பேரறிவாளனை விடுவித்து உத்தரவிடுகிறோம்” என்றும் கூறியது.

பேரறிவாளன் விடுதலை தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். மேலும், சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு உண்டு என்பதை காலம் காட்டியுள்ளது. மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய, எந்த எல்லைக்கும் சென்று போராட தயங்காதவர் அற்புதம்மாள். அவர் தாய்மையின் இலக்கணம். 31 ஆண்டுகளுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்துக்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை – தொல்.திருமாவளவன் வரவேற்பு

பேரறிவாளன் விடுதலையை வரவேற்கும் விதமாக, ”ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின் நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. நீதிபதிகளின் நேர்மைக்கு பாராட்டுகள்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

மேலும், “ஒரு தாயின் இடையறாத சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி காலம் தாழ்ந்த தீர்ப்பு என்றாலும் இறுதியில் அறம் வென்றுள்ளது. இளமை காலத்தை பறிகொடுத்துள்ள பேரறிவாளனுக்கு உரிய இழப்பீடு, மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது. வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு மே 19 காலை 10 மணி முதல் 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என்றும் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி – பேரறிவாளன்

உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது. 30 ஆண்டு காலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி. என் தாய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்துள்ளார். தங்கை செங்கொடியின் உயிர் தியாகம் அளப்பரியது. நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல என விடுதலைக்கு பின் பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை: ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை

பேரறிவாளனின் விடுதலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக ஏற்கிறது – அண்ணாமலை

பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம். அதேநேரம், தீர்ப்பில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: சக்திக்கு மீறி போராடிய இவர்கள் எல்லாம் என் விடுதலைக்கு காரணம்: பேரறிவாளன் முதல் பேட்டி

மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன், தாயார் அற்புதம்மாள் சந்திப்பு

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினர் சந்தித்து பேசினர். அப்போது பேரறிவாளனை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வருக்கு பேரறிவாளன் நன்றி

முதலமைச்சருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு நன்றி தெரிவித்தேன். குடும்பத்தின் சூழ்நிலை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்தார் என முதலமைச்சருடனான சந்திப்புக்கு பின் பேரறிவாளன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.