சித்தூரில் ஆய்வுக்கு சென்றபோது சுவாரஸ்யம் ‘65 வயதான எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க…’: அமைச்சர் ரோஜாவிடம் முதியவர் கோரிக்கையால் பரபரப்பு

திருமலை: சித்தூர் அருகே வீடுவீடாக ஆய்வுக்கு சென்றபோது, ‘தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி’ முதியவர் ஒருவர், அமைச்சர் ரோஜாவிடம் வைத்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க ஜெகன்மோகன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கு முன்னோட்டமாக ‘ஜெகன் அண்ணா சொந்த வீட்டு கனவு திட்டம்’, ‘இலவச வீட்டுமனை’, ‘மாதம் ₹2,500 முதியோர் பென்ஷன்’, ‘பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹15 ஆயிரம்’, ‘கல்லூரி மாணவர்களுக்கு வித்யாதீவணா’ உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்ய அனைத்து அமைச்சர்களுக்கும் முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.இதேபோல் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியில் அமைச்சரும், நடிகையுமான ரோஜா நேற்று வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது, அரசு செயல்படுத்திய திட்டங்கள் சென்றடைந்ததா? என விசாரித்தார். இதேபோல் ஒரு வீட்டில் இருந்த முதியவரை சந்தித்த அமைச்சர் ரோஜா, ‘மாதம் தோறும் பென்ஷன் கிடைக்கிறதா?’ என கேட்டார். அதற்கு அந்த முதியவர், ‘பென்ஷன் சரியாக கிடைக்கிறது. ஆனால் 65 வயதான நிலையிலும் எனக்கு இதுவரை திருமணமே நடக்கவில்லை. தனியாக வாழ்ந்து வருகிறேன். எனவே எனக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா? என கேட்டார்.இந்த கேள்வியால் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலை எழுந்தது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ரோஜா, ‘எங்களால் பென்ஷன் மட்டும்தான் தர முடியும். திருமணம் செய்து வைக்க முடியுமா?’ என சிரித்தபடி கூறினார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.