புத்த ஜெயந்தி நன்னாளில் பிரதமர் நரேந்திர மோடி லும்பினிக்கு விஜயம்

புனித புத்த ஜெயந்தி தினமான 2022  மே மாதம்  16ஆம் திகதி புத்த பெருமானின் பிறப்பிடமான லும்பினிக்கு  மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விஜயம் மேற்கொண்டார். நேபாள பிரதமர் மாண்புமிகு ஷேர் பகதூர் தூபாவின் அழைப்பை ஏற்று இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

2.      பிரதமர் மோடி  அவர்கள்,  பிரதமராக லும்பினிக்கு மேற்கொண்ட தனது முதல் விஜயத்தை, புத்த பெருமான் பிறந்த இடத்தில் அமைந்திருக்கும் புனித மாயாதேவி கோயிலில் இடம்பெற்ற சிறப்பு பிரார்த்தனையுடன் ஆரம்பித்தார். புத்தர் பிறந்த இடம் லும்பினி என்பதற்கான முதல் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அசோகத் தூணையும் இந்திய மற்றும் நேபாள பிரதமர்கள்  பார்வையிட்டனர்.

3.      அத்துடன் லும்பினி மடாலய வலயத்தில் அமைக்கப்படவுள்ள பௌத்த கலாசாரம் மற்றும் மரபுகளுக்கான இந்திய சர்வதேச நிலையத்துக்கான “ஷிலன்யாஸ்” நிகழ்விலும் (அடிக்கல் நாட்டும் வைபவம்) இரு தலைவர்களும் கலந்துகொண்டனர்.  புதுடில்லியை தளமாகக்கொண்டியங்கும் சர்வதேச பௌத்த சம்மேளனத்துக்கு சொந்தமான நிலத்தில் இந்த நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.  பிரார்த்தனை மண்டபம், தியான நிலையம், நூலகம், கண்காட்சி மண்டபம், உணவுச்சாலை, மற்றும் ஏனைய அம்சங்களுடன் முழுமையான ஓர் உலகத்தரம் வாய்ந்த  நிலையமாக இது உருவாக்கப்பட்டுவருவதுடன் பௌத்த யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக திறந்துவைக்கப்படவுள்ளது.

4.      நேபாள அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த 2566வது புத்த ஜெயந்தி நிகழ்வுகளிலும் பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்றிருந்தார். மதகுருமார், பேராளர்கள், அதிகாரிகள் மற்றும் பௌத்த உலகை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி அவர்கள் உரை நிகழ்த்தியிருந்தார். மனிதாபிமானத்தின் ஒட்டுமொத்த உருவகமாக புத்த பெருமான் உள்ளதாக பிரதமர் மோடி அவர்கள் இங்கு குறிப்பிட்டிருந்தார்.

5.      பௌத்தத்தைப் பின்பற்றுபவர்களின் இதயங்களில் இந்தியா இணையற்ற இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நிலையான மக்கள் தொடர்புகளில் பௌத்த உறவுகள் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. 2017 மே மாதம் இலங்கையில் நடைபெற்ற 14வது சர்வதேச வெசாக் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பௌத்த உறவை பிரதிபலிக்கும் வகையில் இவ்வுறவை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்கடொலர் நன்கொடை பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், வெளியுறவு அமைச்சர் டாக்டர்.எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் 2022 மார்ச் 28 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது இந்த நிதியினை பயன்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. பௌத்த மடாலயங்களின் புனரமைப்பு/ நிர்மாணம், ஆளுமைவிருத்தி செயற்பாடுகள், புத்த தாதுக்களை தரிசனத்திற்காக காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை இலக்காகக்கொண்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டது. புத்தபெருமான் மஹாபரிநிர்வாண நிலையை அடைந்த குஷிநகருக்கான சர்வதேச விமான சேவையின் அங்குரார்ப்பண விமானப்பயணமானது, இலங்கையின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த கிட்டத்தட்ட 100 பௌத்த குருமார்களுடன் மெற்கொள்ளப்பட்டமை இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
17 மே 2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.