மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். இவர்கள் இருவரையும் கடந்த 2020 ஜூன் 19ம் தேதி கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தந்தை, மகனை கொலை செய்ததாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் 7 காவலர்கள் என 9 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானது.
இந்த நிலையில் ரகு கணேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் கைதான நாளிலிருந்து சிறையில் இருந்து வருகிறேன். 105 சாட்சிகளில் 22 பேர் மட்டுமே இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளனர். விசாரணை முடியும் வரை சிறையில் அடைப்பது சட்டவிரோதம். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து ஜெயராஜ் மனைவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ பதில் மனுவில், ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் ரகு கணேஷிற்கு தொடர்புள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவால் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. இதனால் ஜாமீன் வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ரகுகணேஷ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி முரளிசங்கர் இன்று உத்தரவிட்டார். மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. மனுதாரர் சம்பவம் நடைபெற்ற போது அதிகாரம்மிக்க பதவியில் இருந்துள்ளார். தற்போதுள்ள நிலையில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் கலைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.