அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பாஜக அரசாங்கத்தை தாக்கி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா இலங்கை போன்று தோற்றமளிக்கிறது என்று எச்சரித்துள்ளார்.
அந்தவகையில், வேலையின்மை, எரிபொருள் விலை மற்றும் வகுப்புவாத வன்முறையின் வரைபடங்களைப் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார்.
“மக்களை திசை திருப்புவது உண்மைகளை மாற்றாது. இந்தியா இலங்கையைப் போன்றே தோற்றமளிக்கிறது,” என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக அரசு தனது தோல்விகளையும், விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் மறைக்க பிற பிரச்சனைகளால் மக்களை திசை திருப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
Distracting people won’t change the facts. India looks a lot like Sri Lanka. pic.twitter.com/q1dptUyZvM
— Rahul Gandhi (@RahulGandhi) May 18, 2022
விலைவாசி, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக சாடி வருகின்றது.
இந்நிலையில், இந்தியாவின் நிலைமை இலங்கையின் பாதையில் செல்வதாகவும், மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கையின் பிரதமர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தொடர்ந்து 13வது மாதமாக பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.