அயோத்தியில் ராமர் கோயில் கருவறை டிசம்பர் 2023க்குள் கட்டி முடிக்கப்படும் – கட்டுமானக் குழு தகவல்

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறை டிசம்பர் 2023க்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோயில் கட்டுமானக் குழுவின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் கமிட்டியின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்ததாவது:-
2023 டிசம்பரில் தரைத்தள (கர்ப கிரகம்)சன்னதி கருவறை கட்டி முடிக்கப்படும். கோவிலில் மீதமுள்ள பணிகள் டிசம்பர் 2024 க்குள் செய்யப்படும். 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கோயில் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருவறைக்கான பீடம் முடியும் தருவாயில் உள்ளது. கிரானைட் கல்லால் அமைக்கப்பட்ட இந்த பீடம் கட்டுமான பணி, கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. இதன் பணிகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீடம் கட்ட, சுமார் 17,000 கற்கள்(5 அடி x 2.5 அடி x 3 அடி அளவுள்ள கற்கள்), பயன்படுத்தப்படும். கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து கற்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, அயோத்திக்கு கிரானைட் கொண்டு செல்வதற்கு உதவுகிறது.மூன்று அடுக்குகளைக் கொண்ட கோவிலின் பணிகள், திட்டமிட்டபடி நடந்து வருவதாக கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரம்மாண்டமான இக்கோயில் கட்டுவதற்கான செலவு ரூ.300-400 கோடி வரை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மூன்று முதல் மூன்றரை ஆண்டுகளில் பிரதான கோவில் கட்டப்படும்.
அங்குள்ள மொத்த 70 ஏக்கர் நிலத்தின் வளர்ச்சிக்கான செலவு ரூ.1100 கோடியைத் தாண்டும் என்று ராம் ஜென்மபூமி டிரஸ்ட் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் கூறினார். கோயில் கட்ட பொதுமக்களிடம் நிதி திரட்டியதன் மூலம் ரூ.2,100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.