பேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: பேரறிவாளன் விடுதலை செய்வதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்,‘ஒரு தீவிரவாதி என்றால் அவனை தீவிரவாதி என்றுதான் கருத வேண்டும். ராஜீவ் காந்தி கொலையாளியை விடுதலை செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் முடிவு, காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு இந்தியனுக்கும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஒரு முன்னாள் பிரதமரின் கொலையாளியை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தின் முடிவு கண்டிக்கத்தக்கது, துரதிர்ஷ்டவசமானது. தீவிரவாதத்துக்கு எதிராக போரிடுபவர்கள், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இன்று துக்கமான நாள்.  இதே போல்  சிறையில் இருக்கும் லட்சக்கணக்கான  ஆயுள் கைதிகளை விடுதலை செய்வார்களா. இது முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி என்ற தனிப்பட்ட மனிதரை பற்றிய கேள்வி அல்ல. இது தீவிரவாதத்துக்கு எதிராக போரிடும் ஒவ்வொரு நபரின் உணர்வு சம்பந்தப்பட்டது. ராஜீவ் காந்தி நாட்டுக்காகத்தான் உயிரை நீத்தார்,  காங்கிரஸ் கட்சிக்காக அல்ல.  மலிவான மற்றும் அற்பத்தனமான அரசியலுக்காக  நீதிமன்றத்தின் மூலம் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதற்கான  சூழ்நிலையை அரசு உருவாக்கி விட்டது. இப்போது எந்த மாதிரியான அரசுகள் ஆட்சியில் உள்ளன, தீவிரவாதத்தின் மீதான அவர்களின் அணுகுமுறை என்ன என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும்,’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.