டெல்லி: ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நாங்கள் மிகுந்த வேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளோம்’ என்று பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். அதேநேரம், பேரறிவாளன் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு அறப்போராட்டம் அறிவித்துள்ளது.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பேசியுள்ளார். அதில், “இன்று காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல, இந்தியா மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் சோகமும் கோபமும் ஏற்பட்டுள்ளது. விடுதலை செயல் கண்டிக்கத்தக்கது மற்றும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு பயங்கரவாதி, பயங்கரவாதியாகவே நடத்தப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நாங்கள் மிகுந்த வேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளோம். ஒரு நாட்டின் பிரதமரைக் கொன்ற குற்றவாளிகள் இப்படி விடுதலை செய்யப்படுவார்கள் என்றால், இந்த நாட்டில் சட்டத்தின் மகத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் யார் நிலைநிறுத்துவது?. முன்னாள் பிரதமரை கொன்ற குற்றவாளிகளை விடுவிக்க உடந்தையாக இருக்கப் போகிறீர்களா மோடி அவர்களே. உங்கள் மௌனம் அவர்களின் விடுதலைக்கு சம்மதமா?” என்றும் ரன்தீப் சுர்ஜேவாலா காட்டமாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ரன்தீப் சுர்ஜேவாலா, “ராஜீவ் காந்தி தனது உயிரை நாட்டிற்காக தியாகம் செய்தார், காங்கிரஸிற்காக அல்ல. அற்ப அரசியலுக்காக அவரை கொன்றவர்களை விடுதலை செய்யும் சூழ்நிலையை இன்றைய அரசாங்கம் உருவாக்கினால், அது கண்டிக்கத்தக்கது. பாஜகவின் அற்ப அரசியலே குற்றவாளியின் விடுதலைக்கு வழிவகுத்தது” என்றும் பேசினார்.
முன்னதாக, ராஜீவ் காந்தி குடும்பம் குற்றவாளிகளை மன்னித்துவிட்டது குறித்து ரன்தீப் சுர்ஜேவாலாவிடம் கேள்வி எழுப்பியதற்கு, “ராகுல், பிரியங்கா, சோனியா ஆகியோருக்கு எந்த தீய எண்ணமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் காந்தி மற்றும் புத்தரின் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள், அவர்களின் தத்துவங்களை நம்புகிறார்கள்” என்று பதில் கொடுத்துள்ளார்.