சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்ற கல்லூரி பேருந்தும், எடப்பாடியில் இருந்து வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காட்சி அனைத்தும் தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விபத்து நடந்தவுடன் தனியார் பேருந்தில் இருந்த ஓட்டுநரும், நடத்துனரும் இருக்கையில் இருந்து தூக்கி எறியப்படும் அந்த காட்சி அதில் பதிவாகியுள்ளது.
மேலும் தனியார் பேருந்தில் இருந்து பயணிகளின் அலறல் சத்தமும் கேட்கிறது. இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
மேலும், தனியார் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சாலை விதிகளை மீறி அதிவேகமாக வந்த கல்லூரி பேருந்து, தனியார் பேருந்து மீது மோதியது இந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதியாகி உள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.