‘பேரறிவாளன் இனி மகிழ்ச்சியாக வாழ வேண்டும்’ – நீதிபதி தாமஸ்!

Perarivalan case Tamil News: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி 161-வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியல் சாசன சட்டத்தின் 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு குறித்து பேசியுள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே டி தாமஸ், தான் பேரறிவாளனை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், அவர் இனி மகிழ்ச்சியாக சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே டி தாமஸ்,1999 ஆம் ஆண்டு ஏஜி பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதித்த உச்ச நீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கியவர் ஆவார். பின்னர், 2013 ஆம் ஆண்டு இந்த வழக்கில் ‘இரட்டை ஆபத்து’ பிரச்சினையை எழுப்பிய தாமஸ், 23 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளை தூக்கிலிடுவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறினார். இது 2014ம் ஆண்டு மூன்று குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் குறைக்கம் உத்தரவுக்கு வழிவகுத்தது.

இது தவிர, நீதியரசர் தாமஸ், ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியிடம் இந்த வழக்கில் பெருந்தன்மை காட்டுமாறு வேண்டி கேட்டுக்கொண்டார். மேலும் தமிழக ஆளுநரின் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் முடிவை “கேட்கப்படாதது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதோடு, மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவின் 14 ஆண்டுகள் சிறைதண்டைனைக்குப் பிறகு 1964-ல் விடுவிக்க மத்திய அரசு எடுத்த முடிவையும் அவர் மேற்கோள் காட்டி இருந்தார்.

இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை குறித்து நீதியரசர் கேடி தாமஸ் கேரளாவின் கோட்டயத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” இதழுக்கு அளித்துள்ள பேட்டி பின்வருமாறு:

“பேரறிவாளனை நான் நேரில் பார்க்க விரும்புகிறேன். அவருக்கு நேரம் கிடைத்தால், அவர் தயவுசெய்து என்னைப் பார்க்கவும். நீண்ட சிறைதண்டனை மற்றும் 50 வயதில் விடுதலையான பிறகு, நான் அவரிடம் என்ன சொல்ல வேண்டும்? அவருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும். அவர் தனது அன்பானவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். மேலும் அவருடைய தாயாருக்கு (அற்புதம் அம்மாள்) முழுப் புகழையும் அளிக்கிறேன். அவர்தான் முழுப் புகழுக்கும் உரியவர்.

மாநில அரசின் அறிவுரைப்படி செயல்பட வேண்டிய ஆளுநர், அதை ஏன் புறக்கணித்தார்? எத்தனை வருடங்கள் தாமதம் பாருங்கள்.” என்று கூறியுள்ளார்.

மேலும், பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்ற 6 குற்றவாளிகளுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதி தாமஸ் குறிப்பிட்டுள்ளார். “மற்றவர்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அவர்களை சிறையில் அடைக்க வேண்டுமானால், சிறை ஆலோசனைக் குழு அவர்களுக்கு எதிராக பாதகமான அறிக்கைகளை அளிக்க வேண்டும். எனக்கு தெரிந்த வரையில் அவர்களுக்கு எதிராக அப்படி எந்த புகாரும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.