சியோல்: தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள, ‘புளூ ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் அதிபர் மாளிகையை, 74 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக மக்கள் பார்வையிட நேற்று அனுமதிக்கப்பட்டது.
கிழக்காசிய நாடான தென் கொரியாவின் சியோல் நகரில், புளூ ஹவுஸ் என்றழைக்கப்படும் அதிபர் மாளிகை உள்ளது. இதன் கூரை ஓடுகள் நீல நிறத்தினால் அமைக்கப்பட்டதை அடுத்து இந்த மாளிகைக்கு புளு ஹவுஸ் என பெயரிடப்பட்டது. இதன் உள்ளே சென்று பார்வையிட, கடந்த 74 ஆண்டுகளாக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், தென் கொரியாவின் புதிய அதிபராக யூன் சியோக் -யூல் மே 10ல் பதவியேற்றார். அவர், தன் அலுவலகத்தை புளு ஹவுஸில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள ராணுவ அமைச்சக வளாகத்திற்கு மாற்றினார். இதையடுத்து, 74 ஆண்டுகளுக்குப் பின் புளூ ஹவுஸை பார்வையிடும் வாய்ப்பு பொது மக்களுக்கு கிடைத்துள்ளது. மிகுந்த பாதுகாப்புடன் இருந்த இந்த மாளிகை தற்போது கண்காட்சி வளாகம் போல காட்சி அளிக்கிறது.பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மாளிகையை ரசித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு, 39 பேர் மாளிகையை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்த போது, புளூ ஹவுஸ் கவர்னர் மாளிகையாக கட்டப்பட்டது. கடந்த, 1945ல் ஜப்பானிடம் இருந்து கொரியா விடுதலை பெற்ற பின், சில காலம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த மாளிகை, பின், 1948ல் தென் கொரியா வசம் வந்தது.
Advertisement