Monkeypox | அமெரிக்காவில் உறுதியானது முதல் தொற்று: அறிகுறிகள் என்ன? – 10 தகவல்

அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. அந்நாட்டில் இந்த ஆண்டு பதிவான முதல் தொற்று இது. மாசசஸ்ட்ஸ் நகரைச் சேர்ந்த அந்த நபர் ஏப்ரல் இறுதியில் கனடா சென்று திரும்பிய நிலையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக அமெரிக்க நோய்ப் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

மங்கி பாக்ஸ் பற்றிய 10 தகவல்களை அறிவோம்:

1. 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடையே பரவிய இந்த நோய் மனிதர்களிடையே 1970 ஆம் ஆண்டு காங்கோவில் பரவியது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் ‘மங்கி பாக்ஸ்’ என அழைக்கப்படுகிறது.

2. மங்கி பாக்ஸ் வைரஸ் பாக்ஸ்வைரிடே (Poxviridae) குடும்பத்தில் உள்ள ஆர்தோபாக்ஸ் வைரஸ் (Orthopoxvirus) இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பெரியம்மை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்றில் இருந்து பரவும் பாக்ஸ் நோயைச் சார்ந்தது.

3. இந்த நோய் வந்தால் காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசை வலி, மிகுந்த உடல் சோர்வு, கணுக்கால் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. மேலும், காய்ச்சல் வந்த 3 நாட்களுக்குள் சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. குறைந்தது 6 நாட்கள், அதிகபட்சமாக 21 நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது.

4. இந்நோய் ஏற்படும் 10-ல் ஒருவருக்கு இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் மத்தியிலேயே உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

5. ஆரம்ப அறிகுறி ஃப்ளூ காய்ச்சல் போன்றே இருக்கும். நெறி கட்டுதலும், முகத்திலும் உடலிலும் ஏற்படும் தடிப்புகளும் இந்த நோயின் முக்கிய அறிகுறி.

6. மங்கி பாக்ஸ் பரவலாக ஆப்பிரிக்க மக்களிடமே அதிகமாகக் காணப்படுகிறது. மக்கள் மத்தியில் அவ்வளவு வேகமாகப் பரவுவதில்லை.

7. அமெரிக்காவில் மங்கி பாக்ஸ் நோய்க்கு உள்ளாகியுள்ள நபர் கடந்த ஏப்ரல் இறுதியில் கனடாவுக்கு சென்றுவிட்டு மே முதல் வாரத்தில் அமெரிக்கா திரும்பியுள்ளார். அவர் தனது தனிப்பட்ட வாகனத்தையே போக்குவரத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்.

8. அமெரிக்காவில் இதுதான் இந்தாண்டின் முதல் மங்கி பாக்ஸ் தொற்று. கடந்த ஆண்டு டெக்சாஸ் மற்றும் மேரிலாண்டை சேர்ந்த தலா ஒருவர் நைஜீரியா சென்று திரும்பியபோது தொற்று ஏற்பட்டது.

9. இதேபோல் அண்மையில் பிரிட்டன், போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளிலும் மங்கி பாக்ஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மங்கி பாக்ஸ் மெல்ல மெல்ல பரவி வருகிறது. இதனால் அந்நாடுகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

10. மங்கி பாக்ஸ் நோய் பாதித்தவர்கள், தொற்று உறுதியானதிலிருந்து சரியாக 4வது நாளில் பெரியம்மை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். மங்கி பாக்ஸை தடுப்பதில் பெரியம்மை தடுப்பூசியே நல்ல பலன் அளிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.