புதுடெல்லி: சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கின் விசாரணை நேற்றும் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், ஒசுகானாவில் சிவலிங்கம் உள்ளது என்ற இந்துக்களின் மனுவுக்கு பதிலளிக்க மசூதி நிர்வாகத்தினருக்கு 2 நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, கோயிலை இடித்து முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினசரி தரிசிக்க உத்தரவிட கோரிய வழக்கும் உள்ளது. இந்த வழக்கில், வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகரின் உத்தரவின்படி கியான்வாபி மசூதிக்குள் கள ஆய்வு நடைபெற்றது. இதில், தொழுகைக்கு முன்பாக கை, கால்களை சுத்தப்படுத்தும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக சர்ச்சை கிளம்பியது.
இதையடுத்து, சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்படும் மசூதியின் ஒரு பகுதி நீதிமன்ற உத்தரவின்படி கையகப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒசுகானாவில் உள்ள சிவலிங்கத்தை அளக்கவும், அதை சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் இந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது சிவில் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணை தொடங்கியது.
அப்போது, ஆஜரான மசூதி நிர்வாக வழக்கறிஞர் அபய் நாத் யாதவ், இந்த வழக்கில் பதில் அளிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம் கோரினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, மே 19-ம் தேதி (இன்று) பதிலளிக்க உத்தரவிட்டார். இதற்கிடையில், ஒசுகானாவிலுள்ள சிவலிங்கத்துக்கு அன்றாடம் பூசை செய்யவும் இந்துக்கள் ஒரு மனு அளித்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி துறவிகள் சிலரும் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் துவாரகா சங்கராச்சாரியர் சுவாமி சொரூபானந்த் சரஸ்வதியின் சீடர்கள் சாத்வீ பூர்ணாம்பா மற்றும் சாத்வீ சாரதாம்பா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். உ.பி. அரசு தரப்பிலும், கள ஆய்வுக்காக ஒசுகானாவில் இருந்து நீரை வழித்த பின் சிக்கிய மீன்களை இடம் மாற்றிப் பாதுகாக்கவும் கோரியிருந்தனர். இவை அனைத்தையும் நாளை விசாரிப்பதாக கூறிய நீதிபதி ரவி குமார் வழக்கை ஒத்திவைத்தார்.
இன்று கூடும் சிவில் நீதிமன்றத்தில், மசூதியில் நடத்தப்பட்ட கள ஆய்வின் விரிவான அறிக்கையை உதவி ஆணையர்கள் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், கியான்வாபி மசூதி – காசி விஸ்வநாதர் கோயில் தொடர்பான பழைய வழக்கிலும் ஒரு திருப்பம் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கள ஆய்வுக்கு தடை கேட்ட வழக்கு, ஒசுகானா மீதான தடையை நீக்குவது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவு செய்ய உள்ளது. இதற்கிடையில், நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட ஆணையர் அஜய் குமார் மிஸ்ராவை மீண்டும் அமர்த்தி அவர் தலைமையில் அறிக்கை பெற வேண்டும் என இந்துக்கள் தரப்பில் நீதிபதி ரவி குமாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.