மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கடந்த 15-ம் தேதி நடந்த தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டார் துர்க்கா ஸ்டாலின்.
தி.மு.க ஆட்சியமைந்த ஓராண்டுக்காலத்தில், துர்கா ஸ்டாலின் சொந்த ஊரான திருவெண்காடு வரும்போதெல்லாம் அவர் வீட்டில் முக்கியப் பிரமுகர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால், இந்த முறை யாரும் வீட்டுக்கு வரக் கூடாது என்று துர்கா கண்டிப்பான உத்தரவு போட்டுவிட்டாராம்.
“அரசு வேலை வாங்கித் தருகிறேன். பணியிட மாற்றம் வாங்கித் தருகிறேன்” என்று சிலர் அவர் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, பண வேட்டை நடத்துவது அவர் காதை எட்டியதால்தான் இந்த உத்தரவு” என்கிறார்கள்.
பெரம்பலூர் தி.மு.க நகரச் செயலாளர் பிரபாகரன் எம்.எல்.ஏ-வுக்கும், மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரனுக்கும் உரசல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இருவருமே ஆ.ராசாவின் வலது, இடது கரம் போன்றவர்கள். யார் ராசாவின் இதயத்தில் முதலிடத்தைப் பிடிப்பது என்கிற அதிகாரப் போட்டி இப்போது உச்சத்தை எட்டியிருக்கிறதாம்,.
“பிரபாகரன், கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை. கட்சி நிர்வாகிகளிடமே பலனை எதிர்பார்த்து, பல விஷயங்களைச் செய்து கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்” என்று ராசாவிடம் போட்டுக்கொடுத்திருக்கிறாராம் மா.செ குன்னம் ராஜேந்திரன். டென்ஷனான பிரபாகரன், குன்னம் ராஜேந்திரன் மீதான கட்சியினரின் புகார்களைப் புத்தகமாகவே கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம். அன்புச் சண்டை வம்புச் சண்டையாகிடுமோ என்று அஞ்சுகிறாராம் ஆ.ராசா!
சசிகலாவின் சகோதரர் திவாகரன், இதயக் கோளாறு காரணமாக ஆபத்தான நிலையில் சமீபத்தில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறியிருக்கிறார்.
தன்னை நலம் விசாரிக்க, மருத்துவமனைக்கு சசிகலா நேரில் வருவார் என மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தாராம் திவாகரன். ஆனால், அவர் வரவில்லை. ஏமாற்றமடைந்த திவாகரன், சசிகலா மீது ஏக வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தலைநகர் சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் காவல் மரண விவகாரத்தில், சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆறு போலீஸார் கைதுசெய்யப்பட்டதுடன், உதவி கமிஷனரும், இன்ஸ்பெக்டரும் இடமாற்றம் செய்யப்பட்டார்கள் அல்லவா… இந்த நடவடிக்கையை எடுத்த சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான விக்னேஷின் அண்ணன் வினோத், விக்னேஷ் மரணத்தை மறைக்க போலீஸார் கொடுத்த ஒரு லட்சம் ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி கூறியிருக்கிறார். அதை வாங்கிக்கொள்ளாத சி.பி.சி.ஐ.டி போலீஸார் ‘அட்வைஸ்’ என்ற பெயரில் வினோத்துக்கு கிளாஸ் எடுத்தார்களாம். பொங்கி எழுந்த வினோத் தரப்பு, “நாங்க சொல்றதைக் காதுல வாங்காம, எங்களை ‘கன்வின்ஸ்’ பண்ற மாதிரியே பேசுறாங்க. விசாரணையோட போக்கே சரியில்லை. சி.பி.சி.ஐ.டி உதவி கமிஷனர் சரவணனை மாற்றியே ஆகணும்” என்று கோரிக்கைவைத்திருக்கிறது. இன்னொரு பக்கம், வழக்கின் சாட்சியான ஆட்டோ டிரைவர் பாபு, வினோத் ஆகியோரின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு மனு போட்டிருக்கிறார்கள். ஆக, வழக்கை விசாரிக்கிற சி.பி.சி.ஐ.டி டீமிலும் சில தலைகள் உருளப்போகின்றன என்கிறார்கள்.
உட்கட்சித் தேர்தல் முடிந்தும்கூட, அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. கட்சியின் சட்ட திட்ட விதிகளை மாற்றி, கட்சியில் ஒற்றையதிகாரமாக தான் வருவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்.
“இரட்டைத் தலைமை அப்படியே நீடிக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கிற வழிகாட்டுதல் குழுவை வேண்டுமானால், ஓ.பி.எஸ் தரப்பில் பத்துப் பேர், எடப்பாடி தரப்பில் பத்துப் பேர் என்று விரிவுபடுத்தலாம்” என்பது பன்னீர் தரப்பின் யோசனை. இந்த இழுபறியால்தான் பொதுக்குழு தள்ளிப்போவதாகச் சொல்கிறார்கள். இந்தக் குட்டையை மேலும் கலக்கி, எப்படியாவது மீன் பிடிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறதாம்.
‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய விளையாட்டுத்துறை அமைச்சர் சுப.மெய்யநாதன் மாமல்லபுரம் சென்றிருந்தார். அப்போது அ.தி.மு.க சார்பில் வென்ற மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தான் தங்கியிருக்கும் தனியார் விடுதிக்கு வரச் சொல்லியிருக்கிறார் அமைச்சர். துணைத் தலைவர் ராகவன் உள்ளிட்டோர் அதைப் புறக்கணித்தபோதும், பேரூராட்சித் தலைவர் வளர்மதி மட்டும் தன்னுடைய கணவர் யஸ்வந்த் ராவுடன் சென்று அமைச்சரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
“சென்னையை ஒட்டி அ.தி.மு.க கைப்பற்றிய ஒரே பேரூராட்சி மாமல்லபுரம்தான். நகர்ப்புற உள்ளாட்சி அமைச்சர் கே.என்.நேரு வந்தபோதே சந்திக்காத பேரூராட்சித் தலைவருக்கு இப்போது மட்டும் என்ன திடீர்ப் பாசம்… தலைவரின் கணவர் யஸ்வந்த், அப்பகுதி தி.மு.க வட்டச் செயலாளருடன் ‘அண்ட் கோ’ போட்டிருப்பதுதான் எல்லாவற்றுக்கும் காரணம்” என்று அ.தி.மு.க தலைமையிடம் போட்டுக் கொடுத்துவிட்டார்களாம் ரத்தத்தின் ரத்தங்கள் சிலர். “இப்படிப் பேசிப் பேசியே அந்தம்மாவை தி.மு.க-வுக்கு அனுப்பிடாதீங்கப்பா’’ என்று எச்சரிக்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த சத்யா, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
`தி.மு.க ஆட்சியில் அ.தி.மு.க தலைவரா…’ என்று அவரது பதவியை காலி செய்வதற்கான அத்தனை வேலைகளையும் செய்தாராம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அ.தி.மு.க உறுப்பினர்கள் நான்கு பேரை தி.மு.க-வுக்கு இழுத்தும், ஆறு பேருக்கு ‘இனிப்பு’ கொடுத்தும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றவைத்தார் அவர். தனது ஆதரவாளரான மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கரின் மனைவி பிரம்மசக்தியை மாவட்ட ஊராட்சித் தலைவராக்கும் ஆர்வத்தில், அமைச்சர் கீதா ஜீவனின் எல்லையான தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்குள்ளும் இறங்கி வேலை பார்த்திருக்கிறார். ஏற்கெனவே அமைச்சர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் இருக்கும் சூழலில், இது மோதலை உச்சத்துக்குக் கொண்டுசென்றுவிட்டதாக கவலையுடன் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.