‘அது என்ன பான் இந்தியா?; அவமரியாதையாக, நகைச்சுவையாக உள்ளது’ – நடிகர் சித்தார்த்

‘கேஜிஎஃப் 2’ படத்தை கன்னடம் அல்லது இந்தியப் படம் என்று கூறுமாறும், பான் – இந்தியா என்ற வார்த்தை அவமரியாதைக்குரியது எனவும் நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த மாதம் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப். 2’. கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிய இந்தப் படம், ரசிகர்களின் அமோக வரவேற்பை இன்றளவும் பெற்று வருகிறது. குறிப்பாக ரவி பசூரூரின் பின்னணி இசையும், உஜ்வர் குல்கர்னியின் படத் தொகுப்பும், புவன் கௌடாவின் ஒளிப்பதிவும் நம்மை திரையில் மிரள செய்தது. நடிகர் யஷின் வித்தியாசமான மேனரிசங்களால், படம் வெளியான ஒரு மாதத்தில் 1,200 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ‘இந்தியா டூடே’ வலைத்தள பக்கத்து உடனான பிரத்யேக பேட்டியில், நடிகர் சித்தார்த், ‘பான்-இந்தியா’ என்ற வார்த்தை அவமரியாதைக்குரியதாகக் கருதுவதாகக் கூறியுள்ளதுடன், ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெற்றி குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அதில், பான் இந்தியா என்ற வார்த்தையை நான் மிகவும் வேடிக்கையாக (funny) பார்க்கிறேன். நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல மொழி திரைப்படங்களில் பணியாற்றி வருகிறேன். அதில் அனைத்திலும் எனது சொந்தக் குரலில்தான் பேசி வருகிறேன்.

எனக்கு இதுவரை யாரும் டப்பிங் பேசியதில்லை. தமிழ்ப் படங்களில் தமிழனாகவும், தெலுங்குப் படங்களில் உள்ளூர் தெலுங்குப் பையனாகவும், இந்திப் படங்களில் பகத்சிங்காகவும் பேசியிருக்கிறேன். எனவே, என்னைப் பொறுத்தவரை, அவை இந்தியத் திரைப்படங்கள் என்றுதான் அழைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் பான்-இந்தியா என்ற வார்த்தை மிகவும் அவமரியாதைக்குரியது என்று நான் நினைக்கிறேன்.

image

பான் இந்தியா படங்கள் என்று அழைக்கப்படும் எந்த படத்தையும், சீர்குலைக்கும் வகையில் குறிப்பிட்டு நான் சொல்லவில்லை. பாலிவுட் திரையுலகம்தான் உயர்ந்தது என்று நீங்கள் நினைத்தால், மற்ற பெரிய படங்கள் பிராந்திய சினிமாவில் இருந்து வருவதால், அவற்றை பான்-இந்தியா என்று அழைக்க வேண்டும் என்று நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். இந்திப் படங்கள் நாடு முழுவதும் உள்ள மக்களை ரசிக்க வைத்தாலும், அவை இந்திப் படங்கள் என்று கூறப்படாது.

மாறாக பாலிவுட் படங்கள் என்றுதான் அழைக்கப்படும். அப்படி அழைப்பதற்கு என்ன பொருள்?. ‘கே.ஜி.எஃப்.’ படத்தினை நீங்கள் மதித்து கன்னடப் படம் என்று அழைக்கலாம். அதற்குப் பதிலாக அது என்ன முட்டாள்தனமாக பான்-இந்தியா படம் என்று அழைப்பது?. நீங்கள் அந்தப் படத்தின் தாக்கத்தை மதித்து, இந்தியப் படம் என்று அழையுங்கள். பான்-இந்தியா படம் என்று சொல்லாமல், இந்தியப் படம் என்று சொல்லலாம். பான்-இந்தியா என்ற வார்த்தை எனக்குப் புரியவில்லை. சொல்லப்போனால் அது வேடிக்கையான வார்த்தை” என்று கூறியுள்ளார். நடிகர் சித்தார்த் தற்போது இந்தியில் ‘எஸ்கேப் லைவ்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். அந்த வெப் தொடர் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.