கேரளாவில் மழை நீடிப்பு- 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்:

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

தற்போது பெய்து வரும் மழை 22ந் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இதுபோல திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே திருச்சூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையோரம் நின்ற பழமையான மரங்கள் முறிந்து விழுந்தது. பெரமங்கலம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஆட்டோ ஒன்று சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

மரம் முறிந்து விழுந்ததால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

இதற்கிடையே கேரளாவில் வருகிற 27ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல் மந்திரி பினராயி விஜயன் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.