புதுடெல்லி: புதுடெல்லியின் துணைநிலை ஆளுநராக கடந்த 2016-ம் ஆண்டில், அனில் பைஜால் பதவி ஏற்றார். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மத்திய உள்துறை செயலாளராகவும் இவர் பணியாற்றினார். இதர அமைச்சகங்களிலும், இவர் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
பல விஷயங்களில், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும், முதல்வர் கேஜ்ரிவாலுக்கும் இடையே அதிகார மோதல் இருந்துவந்தது. அரசியலமைப்பு சட்டப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை, உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் உள்ளது என உச்ச நீதிமன்றம் தெளிவுபட கூறியது டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது.
இந்நிலையில் அனில் பைஜால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.