சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஸின் மகனும், அதிமுக எம்பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத், நேற்று சந்தித்தார். அப்போது பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு மனு அளித்தார்.
மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகள் மூலம் தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட 41 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பணிகளை கண்காணிக்க, மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களான தமிழக எம்பி.க்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், பி.ஆர்.நடராஜன், சு.திருநாவுக்கரசர், திருமாவளவன், ஓ.பி.ரவீந்திரநாத்குமார், கே.நவாஸ்கனி, ஆர்.எஸ்.பாரதி, ஏ.நவநீதகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், என்.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், எம்.பூமிநாதன், ஜே.எம்.எச்.அசன் மவுலானா, கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில், அதிமுக எம்பி ஓ.பி.ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அப்போது பாரதியார் கவிதைகள் நூலை முதல்வரிடம் வழங்கினார். தொடர்ந்து, தேனி தொகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அடிப்படைத் தேவைகள், மருத்துவமனைக்கான உபகரணங்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தார்.