ஆந்திர மாநிலத்தில்
ஜெகன் மோகன்
தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநில அமைச்சரவை அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. அதில், புதிதாக 14 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டர். அவர்களில் முக்கியமானவர் நடிகை
ரோஜா
. ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவரும், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவருமான நடிகை ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைகிறதா என்று வீடுவீடாக சென்று கேட்டற்றிந்து மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, நகரி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ரோஜா, புத்தூர் மண்டலம் ஒட்டிகுண்டல என்ற கிராமத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று, அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கின்றனவா என்று விசாரித்தார். அப்போது ஒரு வீட்டில் இருந்த முதியவரிடம் உங்களுக்கு பென்சன் கிடைக்கிறதா என்று ரோஜா கேட்டார். அதற்கு பென்சன் எல்லாம் கிடைக்கிறது மற்ற திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றார்.
இதையடுத்து, உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? மனைவிக்கு என்ன வயது என்று அந்த முதியவரின் குடும்பத்தை பற்றி அமைச்சர் ரோஜா விசாரித்தார். அதற்கு பதிலளித்த அந்த
முதியவர்
, எனக்கு மனைவி, குழந்தைகள் இல்லை. அதுதான் பிரச்சினை. எனக்கு உடனே
திருமணம்
செய்து வையுங்கள் என்று ரோஜாவிடம் கூறினார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ரோஜா குடும்பத்துக்கு அரசின் திட்டங்கள் வரவில்லை என்றால் அதற்கு தீர்வு காணலாம். ஆனால் உங்களுக்கு நான் எப்படி திருமணம் செய்துவைக்க முடியும் என்று சிரித்துக் கொண்டே கேட்டு விட்டு அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்தார். ரோஜாவிடம் திருமணம் செய்து வையுங்கள் என்று முதியவர் கேட்டது அப்பகுதியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.