இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கடந்த 2019, ஆகஸ்ட் வரை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370 மற்றும் 35A-ன் படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கென தனி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2019, ஆகஸ்டில் தற்போது மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க அரசு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370 மற்றும் 35A-வை நீக்கியது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகும் கூட, ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது மற்றும் மாநிலத்துக்குள்ளே அவ்வப்போது பயங்கரவாத அமைப்புகளால் மக்கள் உயிரிழப்பது என்பது நடந்துகொண்டுதான் இருந்தது. அண்மையில் கூட காஷ்மீர் பண்டிட் ஒருவர், ‘காஷ்மீர் டைகர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ராணுவத்தினருக்கு, தீவிரவாதிகளுக்கிடையிலான துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில், “சிறப்பு அந்தஸ்து 370-ஐ நீக்கிய பிறகும் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை” எனக் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். ரஜோரி மாவட்டம் கோட்ராங்கா பகுதியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “இந்த வாரத்தில், இதுபோன்று மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. சில வாரங்களுக்குப் பிறகு, இது மீண்டும் தொடங்கும். பின்னர் கொஞ்ச நாளைக்கு இது நின்றுவிடும். பிரிவு 370 மற்றும் 35A நீக்கப்பட்ட பிறகும் கூட நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை.” எனக் கூறினார்.
மேலும், பிரிவு 370-ன் நிலை என்ன என்று செய்தியாளர் கேட்டபோது, “நாங்கள் ஒன்றும் வேறொரு நாட்டின் மொழியைப் பேசுபவர்கள் அல்ல. சட்டத்தை நாங்கள் கையில் எடுக்காமல், எங்கள் கருத்தை நாங்கள் நீதிமன்றத்தின் முன் வைப்போம்” என உமர் அப்துல்லா பதிலளித்தார்.