'காத்துவாக்குல ரெண்டு காதல்' டிக்கெட் எண்ணிக்கையை குறைவாக காட்டிய தியேட்டருக்கு அபராதம்

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டிக்கெட் கணக்கை தவறாக வழங்கியதற்காக திருவெறும்பூர் பகுதியில் உள்ள திரையரங்கத்திடம் 7 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லலித் குமார் தயாரித்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். கடந்த 28-ம் தேதி வெளியான இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்தது. அத்துடன் தமிழகத்தில் மட்டும் சுமார் 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

image

இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் விநியோக நிறுவனம் சார்பில் கடந்த வாரம் சோதனை செய்துள்ளனர். அதில் சோதனை சமயத்தில் திரையிடப்பட்டிருந்த காட்சிக்கான டிக்கெட் எண்ணிக்கையை குறைவாக காட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அன்று இரவு காட்சி ரத்து செய்யப்பட்டதுடன், திரையரங்கிற்கான உரிமம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க… `வெப்ப அலை இன்னும் அதிகரிக்கும்’- மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

இதனால் அந்த திரையரங்கம் 7 லட்சம் ரூபாய் அபராதம் கட்டியுள்ளது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள திரையரங்குகள் அண்ணாத்த, வலிமை ஆகிய திரைப்படங்களிலும் முறைகேடு செய்திருப்பதாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என சினிமா துறையினர் கூறுகின்றனர். தமிழகத்தில் இது போன்ற முறைகேடுகளில் சில திரையரங்குகள் ஈடுபடுவதால் தயாரிப்பளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

image

இது குறித்து தயாரிப்பாளர்களிடன் கேட்டபோது, தமிழகத்திலுள்ள பெரும்பாலான திரையரங்குகள் கணினியால் இணைக்கப்படாமல் உள்ளன. எனவே அது சாத்தியமானால் தான் இதுபோன்ற தவறுகளை தடுக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசும் தலையிட்டு அனைத்து திரையரங்குகளையும் கணினி மூலம் இணைக்கப்பட்டால் அரசுக்கும் வரி வருவாய் அதிகரிக்கும் என தெரிவிக்கின்றனர்.

-செந்தில்ராஜா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.