“இந்தியாவின் நிலைமையும், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் நிலைமையும் பார்ப்பதற்கு ஒன்றாகவே இருக்கிறது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை மக்கள் அங்கு போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியாளர்கள் தலைமறைவாகும் அளவுக்கு அங்கு நிலைமை சென்றுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் நிலவி வரும் சூழலையும், இந்தியாவில் நிலவும் சூழலையும் ஒப்பிட்டு தனது ட்விட்டரில் ராகுல் காந்தி இன்று ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் இரு நாடுகளில் இருக்கும் வேலைவாய்ப்பின்மை, வகுப்புக் கலவரங்கள், பெட்ரோல் விலை ஆகியவை ஒப்பிடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட இந்தக் குறியீடுகள் அனைத்தும் ஒன்றை போலவே இருக்கின்றன. இந்த வரைப்படத்துக்கு கீழே ராகுல் எழுதியுள்ள பதிவில், “மக்களை திசைதிருப்புவதால் உண்மை மாறப்போவது இல்லை. இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM