திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைக்கும் பணிகள் -சென்னை உயர் நீதிமன்றம் தடை

திருவண்ணாமலை கிரிவலப் பாதை அருகே மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அமைக்கும் பணிகளுக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணமலையில் கிரிவலப் பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து, திருவண்ணாமலையை சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், “வேங்கிக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கி, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து கருணாநிதி சிலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர். மேலும், அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்தும் பாதிக்கப்படும்” எனக் கூறப்பட்டிருந்தது.
image
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தும், வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு நேற்று உத்தரவிட்டது. அதுவரை சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றம் தடை
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “ஆக்கிரமிப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வருவாய் துறையின் பணி என்றும், அது மாவட்ட ஆட்சியரின் அதிகார வரம்பிற்குள் உள்ளபோது அவர்களிடம் விளக்கம் கேட்காமல், காவல்துறையிடம் விளக்கம் பெற வேண்டும் எனக் கூறுவது ஏன்?” என கேள்வியெழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, உரிய ஆதாரங்களை சேகரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதுவரை குறிப்பிட்ட இடத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.