திருப்பதி:
திருப்பதி மாவட்டம் கூடூர் அடுத்த திலக்நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். நேற்று அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் சதீசின் வீட்டுக்கு புகுந்தார். அங்குள்ள பொருட்களை திருட முயன்றார்.
இதனை கண்டு திடுக்கிட்ட சதீஷ் அலறி கூச்சலிட்டார். வீட்டில் இருந்த தடி மற்றும் இரும்புக்கம்பியால் அந்த வாலிபரை தாக்கினார்.
சதீசின் அலறல் சத்தத்தைக் கேட்டு அப்பகுதியினர் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் அந்த வாலிபரை பிடித்து அங்குள்ள ஒரு மரத்தில் கட்டிப்போட்டு சரமாரியாகத் தாக்கினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூடூர் 2 டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதிய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரிடம் விசாரித்தனர். அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தியில் பேசினார். தான் வீட்டுக்குள் திருட வந்ததாகக் கூறினார்.
இதையடுத்து அவரை மீட்டு கூடூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிக்சை பலனின்றி கொள்ளையன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து கூடூர் 2 டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.