ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழா கோலகலமாக நடைபெறுவது வழக்கம். ஆஸ்கர் அகாடெமி, பாஃப்தா மற்றும் கிராமி விருது விழா நிகழ்ச்சிகளுக்கு, உலக அளவில் திரைப்பட கலைஞர்கள் மற்றும் ரசிகர்களிடையே எந்தளவு வரவேற்பு இருக்குமோ, அதே அளவு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கும் மாறாமல் கிடைக்கும்.
இந்த விழாவில் கலந்துகொள்வதை பெருமையாகவே சர்வதேச திரைப்பட பிரபலங்கள் கருதுவர். வழக்கமாக, இந்தியாவில் இருந்து ஒன்றிரண்டு திரை நட்சத்திரங்களின் தலைகளே, அதுவும் பாலிவுட்டில் இருந்து மட்டுமே தென்படும் நிலையில், இந்தாண்டு விழாக்குழுவினர் அழைப்பின் பேரில், கோலிவுட் நட்சத்திரங்களும் குவிந்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளனர். 75-வது கேன்ஸ் விழாவில், கோலிவுட் நட்சத்திரங்களுக்கு சிறப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டநிலையில் யார், யார் எதற்காக கலந்துகொண்டுள்ளனர் எனப் பார்க்கலாம்.
நடிகர் ஆர். மாதவன்
கிரையோஜனிக் ராக்கெட் தொழில் நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ல் கேரள காவல்துறையால் கைதாகி, பின்னர் நிரபராதி என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படம் உருவாகியுள்ளது. இதில் நம்பி நாரயணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாதவன், இந்தப் படத்தை இயக்கியுள்ளதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தமிழில் சூர்யா, இந்தியில் ஷாருக்கான் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் வருகிறார்கள். 5 மொழிகளில் ஜூலை 1-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம், கேன்ஸ் விழாவில் சர்வதேச திரைப் பிரபலங்கள் முன்னிலையில் இன்று திரையிடப்படுகிறது. இதையொட்டி நடிகர் மாதவன் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார்.
கமல்ஹாசன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 4 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் சென்று மாஸாக என்ட்ரி கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித், நீலம் புரடொக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள பா.ரஞ்சித், தற்போது கோல்டன் ரேஷியோ பிலிம்ஸுடன் இணைந்து ‘வேட்டுவம்’ படம் மற்றும் இணையத் தொடரை தயாரித்து இயக்குகிறார். வருகிற 28-ம் தேதி வரை நடைபெறுகிற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுவதையொட்டி, வெள்ளை நிற கோட் ஷுட்டில் ஸ்டைலாக முதன்முறையாக பா.ரஞ்சித் கலந்துகொண்டுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான்
30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட இசைத்துறையில் ஜாம்பவனாக திகழும் ஏ.ஆர். ரஹ்மான், ‘லி மஸ்க்’ என்ற குறும்படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். ‘லி மஸ்க்’ குறும்படத்திற்கான கதையை ஏ.ஆர். ரஹ்மானுடன் அவரது மனைவி சாய்ரா ரஹ்மானும் இணைந்து எழுதியுள்ளனர். 36 நிமிடங்களே ஓடக்கூடிய ‘லி மஸ்க்’ குறும்படம் வெர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் தன் வாழ்நாளில் சந்தித்த பல ஆண்களை, அவர்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஊர்வசி ரௌதாலா
இரட்டை இயக்குநர்களான ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள். ‘தி லெஜண்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில். பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்தப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், நடிகர்கள் மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில்தான் ‘தி லெஜண்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்பட விழாவிற்கு செல்வதற்கு முன்னர் செய்தியாளர்கனிடம் பேசிய நடிகை ஊர்வசி ரௌதாலா, “தமிழில் அறிமுகமாக இருப்பதில் மகிழ்ச்சி என்றும், கேன்ஸில் ‘தி லெஜண்ட்’ படத்தின் போஸ்டரின் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டதற்கு பெருமைப்படுவதாகவும்” தெரிவித்திருந்தார். இதனை முன்னிட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அவர், வெள்ளை நிற நீண்ட கவுனில் சிவப்பு கம்பள வரவேற்பில் ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினார்.
பார்த்திபன்
கமல்ஹாசன் போன்று திரையுலகில் புது புது முயற்சிகளை மேற்கொள்பவர் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில், ஒரே ஷாட்டில் சுமார் 100 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘இரவின் நிழல்’ படமும் கேன்ஸ் விழாவில் சர்வதேச திரைக்கலைஞர்கள் முன்னிலையில் திரையிடப்படுகிறது.
மேலும் நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே ஆகியோர் சிறப்பு அழைப்பின் பேரில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.