நகரி:
ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று கேட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சுற்றுலாத்துறை மந்திரியும், நடிகையுமான ரோஜா, புத்தூர் மண்டலம் ஒட்டிகுண்டல என்ற கிராமத்துக்கு அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்றார்.
அங்கு ஒவ்வொரு வீடாக சென்று விசாரித்து வந்த அவர், முதியவர் ஒருவரின் வீட்டிற்கு சென்று ‘ அரசு வழங்கும் பென்சன் கிடைக்கிறதா?’ என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், ‘பென்சன் கிடைக்கிறது. மற்ற திட்டங்கள் எதுவும் கிடைப்பதில்லை’ என்றார்.
அவரது குறைகளை கேட்டறிந்த ரோஜா ‘உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? மனைவி எங்கே?’ என கேட்டுள்ளார்.
அதற்கு முதியவர், ‘எனக்கு மனைவி, குழந்தைகள் இல்லை. அதுதான் பிரச்சினை. எனக்கு உடனே திருமணம் செய்து வையுங்கள்’ என்றார்.
முதியவரின் அப்பாவித்தனமான பதில் ரோஜாவையும், அவருடன் சென்றவர்களையும் சிரிக்க வைத்தது. இதற்கு பதிலளித்த ரோஜா ‘குடும்பத்துக்கு அரசின் திட்டங்கள் வரவில்லை என்றால் அதற்கு தீர்வு காணலாம். உங்கள் திருமணத்திற்கு நான் எப்படி தீர்வு காண முடியும் என’ என்று சிரித்தபடி கேட்டுக்கொண்டே அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்தார்.