“விஜய்யின் இந்தப் பிறந்தநாளில் ஒரு முக்கியமான ஒரு அறிவிப்பை கொடுக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு விஷயம் ரொம்ப நாளா என் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு.
குறிப்பா, இந்திய மக்கள் பாதுகாப்பா இருக்காங்களா?
தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கா?
ஒரு தாய் தனியா இருக்க முடியுதா?
ஒரு குழந்தை தனியா விளையாடிட்டு வீட்டுக்கு வர முடியுதா?
என்பது குறித்தெல்லாம் ரொம்ப காலமாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு தமிழனுக்கும் பாதுகாப்பு கிடைக்கவேண்டும். அதற்கு எல்லோர் வீட்டிலும் சிசிடிவி கேமரா இருந்தால் குற்றம் கொஞ்சம் குறையும்.
யாராவது திருடன் வந்துடுவானோ என்ற பயத்துடனேயே வாழ்கிறார்கள் மக்கள். அதுவே, சிசிடிவி இருந்தால் திருட வருபவர்களுக்கு ஒரு பயம் இருக்கும். ஆனால், ஏழை மக்களுக்கு சிசிடிவி வாங்கும் வசதி இல்லை.
அதனால், நான்கு மாவட்டங்களில் எனது துபாய் நண்பர்களுடன் இணைந்து மாவட்டத்துக்கு பத்தாயிரம் வீதம் சிசிடிவி கேமராக்கள் கொடுக்கவிருக்கிறேன். முதற்கட்டமாக சென்னையில் கொடுக்கவிருக்கிறோம். அதற்கடுத்ததாக, மதுரை, கோவை என்று விரிவுப்படுத்த ஆசைப்படுகிறேன். இப்படியொரு பெரிய பரிசை உன் பிறந்தநாளுக்கு கொடுக்கிறேன் விஜய். இதைவிட எனக்கு வேறு எந்த சந்தோஷமும் கிடையாது”.
கடந்தாண்டு ஜூன் மாதம் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படிப் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.
இந்த வீடியோ வெளியாகி சரியாக இரண்டே மாத்தில், “எனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ எனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட 11 பேருக்கு தடை விதிக்க வேண்டும்” என சென்னை நகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் விஜய்.
அப்போது இந்த விவகாரம் குறித்து விசாரித்ததில், சிசிடிவி கேமராக்கள் தயாரிக்கும் துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தியாவில் தங்களது பிசினஸைத் துவக்க சில மாநிலங்களில் சில நகரங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறது. அங்கு முதலில் இலவசமாக கேமராக்களைப் பொருத்தித் தர நினைத்து, அந்த முயற்சியில் இங்குள்ள புகழ்பெற்ற நடிகர்களை இணைத்தால் காரியம் சுலபமாக நடக்கும் எனக் களம் இறங்கியதாகச் சொன்னார்கள்.
மேற்படி துபாய் நபர்கள் சென்னை வந்து தங்களது திட்டத்தில் விஜய்யை சேர்க்க அவரது அப்பாவை அணுகியுள்ளனர். அவர்கள் எஸ்.ஏ.சி.யிடம் என்ன பேசி, என்ன சொன்னார்களோ, எஸ்.ஏ.சி மட்டுமல்லாது அவரின் மனைவியுமே இந்த சிசிடிவி மேட்டருக்கு ஓ.கே சொல்ல, அதன்பிறகே அந்த வீடியோ வெளியானது.
ஆனால், விஜய்யோ தன் ரசிகர் மன்ற நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்தை விட்டு துபாய் நபர்கள் குறித்து விசாரித்ததில், இந்தத் திட்டத்தில் வேறு ஏதோ நோக்கம் இருக்கலாம் எனத் தெரிந்து கொண்டதாகவும், அதன் பிறகே தாய் தந்தைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார் எனவும் அப்போதே செய்திகள் வெளியாகின.
ஏற்கெனவே விஜய் ரசிகர்களை அரசியலில் ஈடுபடுத்த எஸ்.ஏ.சி. நினைத்தபோது அதற்கு விஜய் உடன்படாததால் அப்பா – மகன் இடையில் பிரச்னை தொடங்கியிருந்த நிலையில், இந்த கேமரா விவகாரம் அதை இன்னும் பெரிதாக்கிவிட்டது.
விஜய் வழக்கு போட்டதைத் தொடர்ந்து துபாய் நபர்களை விட்டு ஒதுங்கிவிட்டார் எஸ்.ஏ.சி.
இந்நிலையில் தற்போது மறுபடியும் அதே துபாய் நிறுவனம் எஸ்.ஏ.சி. மற்றும் ஷோபா இருவரையும் சந்தித்தது மட்டுமல்லாமல் சில தினங்களுக்கு முன் சென்னையின் மகளிர் கல்லூரி ஒன்றில் தாங்கள் நடத்திய நிகழ்ச்சியில் அவர்கள் இருவரையும் மேடையிலும் ஏற்றியிருக்கிறது. திரும்பவும் அதே இந்திய நகரங்களில் சிசிடிவி பொருத்தும் திட்டம்தான் இலக்கு.
அடுத்த மாதம் விஜய் பிறந்த நாள் வருகிற சூழலில் மறுபடியும் எஸ்.ஏ.சி, விஜய் ஒதுக்கிய துபாய் நண்பர்களுடன் சேர்ந்திருப்பது குறித்து எஸ்.ஏ.சி.க்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.
“போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் ‘விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கேமரா’ன்னு நிச்சயம் சொல்ல மாட்டார்னு தோணுது. ஏன்னா மகன் வழக்கு வரைக்கும் போயிட்டதால அப்பவே மனசு உடைஞ்சிட்டார்” என்றவர்கள், “துபாய் நண்பர்கள்கூட இப்ப ஏன் மறுபடியும் சேர்ந்திருக்கிறார்ன்னு தெரியலை… வேறு ஏதும் ப்ளான் வச்சிருக்காங்களான்னும் தெரியலை” என்கிறார்கள்.
எஸ்.ஏ.சி., துபாய் நண்பர் எனக் குறிப்பிடும் ரிஜாய் தாமஸிடம் பேசினோம்.
“கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட நான் இப்ப துபாய்ல வசிக்கிறேன். ‘செக்யூர் கேம்’ங்கிறது எங்க நிறுவனத்தின் பெயர். எங்கள் சி.சி.டி.வி பிசினஸை இந்தியாவுல விரிவு்படுத்துவதின் ஒரு தொடக்கப் புள்ளியே இந்த இலவச கேமரா பொருத்துகிற ஐடியா. ‘நம் நகரத்தைக் காப்போம்’னு ஓர் இயக்கமாகவே இதை முன்னெடுத்துச் செய்யலாம்னு நினைக்கிறோம்.
பெரிய நடிகர்களின் பங்கு ஏதாவதொரு வகையில் இருந்தா நல்ல ரீச் இருக்கும்ன்னுதான் விஜய்யின் அப்பாவை அணுகினோம். ஆனா விஜய்க்கும் அவருடைய அப்பாவுக்கும் ஏற்கெனவே மனத்தாங்கல் இருந்திருக்கு. அதனாலதான் கடந்தாண்டு எஸ்.ஏ.சி அறிவிச்சபடி கேமரா தர முடியாமப் போச்சு. இந்தாண்டு விஜய் பிறந்த நாள் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பலை. எஸ்.ஏ.சி சார் மற்றும் விஜய் அம்மா ரெண்டு பேரும் எங்களுக்கு என்னைக்குமே நல்ல நண்பர்கள். அவ்வளவுதான்!” என்றார்.
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, “தன்னுடைய ரசிகர்களை யாரும் தவறாப் பயன்படுத்திடக் கூடாதுன்னு விஜய் நினைக்கிறார். வழக்கு போட்டதுக்கு அப்பா, அம்மா மீது கோபமோ வெறுப்போ காரணமல்ல. இதை அவருடைய பெற்றோரும் புரிஞ்சுக்கிட்டாங்கன்னா பிரச்னையே இல்லைங்க. ஒரு விஷயத்தை விஜய் வேண்டாம்னு சொல்றப்ப எஸ்.ஏ.சி ஆர்வம் காட்டினா அது விரிசலுக்குத்தானே வழி வகுக்கும்?” என்கிறார்கள்.