ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் 1999ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதே நீதிபதி கே.டி.தாமஸ் பின்னர் பேரறிவாளவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
ஒரு குற்றவாளிக்கு 2 முறை தண்டனை கொடுக்க முடியாது என்பதே நீதிபதி கே.டி.தாமஸின் கருத்தாகும். இதே கருத்தை முன்வைத்தே பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிட்டு பேரறிவாளனை தூக்கிலிருந்து மீட்டார். இப்போது
பேரறிவாளன் விடுதலை
செய்யப்பட்டிருப்பது குறித்து நீதிபதி கே.டி.தாமஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலைக்கு அரசியல்சட்டப் பிரிவு 142ஐ சுப்ரீம் கோர்ட் பயன்படுத்தியிருப்பது மாஸ்ட்ஸ்ட்ரோக் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக நீதிபதி கே.டி.தாமஸைத் தொடர்பு கொண்டு பேசினோம். நமக்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியிலிருந்து:
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து ஆரம்பத்திலிருந்தே உங்களுக்கு நன்றாக தெரியும். தற்போது பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?
பேரறிவாளன் தனது 14 வருட சிறைக்காலத்தை முடித்தவுடனேயே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பேரறிவாளனுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அவர் உடனடியாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும். திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதை நான் ஒரு சாதாரண மனிதனாக சொல்கிறேன், நீதிபதியாக சொல்லவில்லை. எனது குடும்பத்துடன் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன், பேரக்குழந்தைகளுடன் இருக்கிறேன். அதுபோல அவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
1999ம் ஆண்டு நீங்கள்தான் அவருக்குத் தண்டனை கொடுத்தீர்கள். அதன் பின்னர் 23 வருடத்திற்குப் பிறகு அவரை தூக்கில் போடுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று சொல்லியிருந்தீர்கள். அதைப் பற்றிய கருத்து?
23 வருடம் அல்ல, 14 வருடம். சட்டப்படி ஆயுள் காலம் என்பது ஆயுள் முழுக்க சிறையில் கழிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஒரு கைதி, 14 வருட சிறைக்காலத்தை முடித்ததும் அவரை விடுதலை செய்வது குறித்து மாநில அரசால் பரிசீலிக்க முடியும். விடுதலை செய்யவும் முடியும். அதற்கான உரிமை மாநில அரசுக்கு உண்டு. இந்த அளவுகோலின் கீழ் பேரறிவாளன் வழக்கும் வருவதாக நான் கருதினேன். மேலும், 14 வருடத்திற்குப் பிறகு தூக்குத் தண்டனை விதிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. ஒருவருக்கு 2 தண்டனை தர முடியாது. பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனை முடிந்து விட்டது. அது முடிந்ததும் தூக்குத் தண்டனை என்பதை அரசியல் சட்டம் அனுமதிக்காது. அதனால்தான் அவருக்கு ஆதரவாக நான் குரல் கொடுத்தேன்.
பேரறிவாளனுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியிருந்தீர்கள்.. அதுகுறித்து..?
அவருக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால் அதை அவர்கள் ஏற்றதாக நான் கருதவில்லை. எனக்கு அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. சட்ட மாணவராக நான் இருந்தபோது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். 3 நாளில் எனக்கு அவரிடமிருந்து பதில் வந்தது. “மை டியர் தாமஸ்” என்று கூறி பதில் அனுப்பியிருந்தார்.
பேரறிவாளன் விடுதலை மற்ற 6 பேருக்கும் பொருந்துமா?
நிச்சயமாக மற்றவர்களுக்கும் இது பொருந்தும். அவர்களும் விடுதலையாக முடியும்.
இந்த வழக்கில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?
இந்த விவகாரத்தில் தமிழக அரசு செயல்பட்ட விதத்தை நான் பாராட்டுகிறேன். பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி தமிழக அமைச்சரவை தீர்மானம் போட்டதை நான் பாராட்டுகிறேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கவில்லை. குடியரசுத் தலைவர்தான் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்று அவர்கள் செய்த வாதம் அர்த்தமற்றது. 161வது சட்டப் பிரிவின் படி மாநில ஆளுநரே அதை செய்யலாம். ஆளுநர் ஏன் தனது கடமையை செய்யவில்லை. இதுதான் கேள்விக்குரியது.
சுப்ரீம் கோர்ட்டின் மாஸ்டர்ஸ்டிரோக்காக எதைக் கருதுகிறீர்கள்?
பேரறிவாளனை விடுதலை செய்ய 142 சட்டப் பிரிவை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியதுதான் மாஸ்டர்ஸ்டிரோக். இந்த சட்டத்தை நாட்டிலேயே ஒரே ஒரு நீதிமன்றம்தான் பயன்படுத்த முடியும், அது உச்சநீதிமன்றம். ஒருவருக்கு நீதி எந்த இடத்திலும் கிடைக்காமல் போகும்பட்சத்தில் உச்சநீதிமன்றமே இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி செய்ய முடியும். அதைத்தான் உச்சநீதிமன்றம் செய்துள்ளது. தனது அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் பயன்படுத்தியிருப்து எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொல்லப்பட்ட மற்ற 18 பேரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறதே..?
18 பேர் கொல்லப்பட்டனர் என்பது சரிதான். ஆனால் அதை 18 குற்றச் சம்பவமாக பார்க்க முடியாது. ஒரே சம்பவமாகத்தான் பார்க்கப்படும். குற்றச் செயல் ஒன்றுதான். ஒருவர் குறி வைக்கப்பட்டார். நடந்தது குண்டு வெடிப்பு, அந்த சம்பவத்தில் அவருடன் இருந்தவர்கள் பலியாகியுள்ளனர். அதை ஒரே குற்றச் செயலாகத்தான் பார்க்க முடியும். ஆயுதத்தைப் பொறுத்துதான் அந்த குற்றச் செயல் பார்க்கப்படும். இதுவே கத்திக் குத்தாக, துப்பாக்கிச் சூடாக இருந்தால் வேறு மாதிரி பார்க்கப்பட்டிருக்கும். ஆனால் இது குண்டுவெடிப்பு.
அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறதே?
அவர்களது கருத்தை சொல்ல அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. எல்லா வழக்குகளிலும் இதுபோன்ற கருத்துக்கள் வருவது வழக்கம்தான். ஒரிசா வழக்கில் பாதிரியார் கிரஹாம் கொலைக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதாக கிரஹாமின் மனைவி பெருந்தன்மையுடன் அறிவித்தார். அதைத் தவிர்த்து மற்ற வழக்குகளில் யாருமே குற்றவாளிகளுக்கு தண்டனையைக் குறைக்க ஒப்புக் கொண்டதாக எனக்கு நினைவில்லை. பெரும்பாலும் குற்றவாளிகளுக்கு தண்டனையைக் குறைக்க பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவதில்லை.
பேரறிவாளன் நிரபராதி என்று கருதுகிறீர்களா?
நிச்சயம் அப்படி நான் சொல்ல மாட்டேன். எங்களுக்கு கொடுக்கப்பட்ட சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப்படையில்தான், பல மாதமாக நடந்த நீண்ட விசாரணைக்குப் பின்னர்தான் பேரறிவாளனுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் எப்படி அவரை நிரபராதி என்று சொல்ல முடியும். அப்படி சொன்னால் எனது மனசாட்சிக்கு விரோதமானதாக அது இருக்கும்.
பிறகு ஏன் பேரறிவாளனுக்கு ஆதரவு அளித்தீர்கள்?
பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிக நீண்டது, இரு தண்டனைகளை அளிக்க சட்டத்தில் இடமில்லை என்ற அடிப்படையில்தான் அவருக்கு ஆதரவாக நான் பேசினேன்.