போலி மருத்துவர் விவகாரம்- எடப்பாடி பழனிசாமிக்கு மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை:

தி.மு.க. ஆட்சியில் போலி மருத்துவர் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கடந்த 07-05-2022 அன்று கடலூர் மாவட்டம் வேப்பூர் தாரா மருந்தகத்தில் சிகிச்சை பெற்ற இரண்டு மணி நேரத்தில் 5-வயது பெண் குழந்தை உயிரிழந்து விடுகிறது.

இது குறித்து கடலூர் மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார், துணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர் மீரா உத்தரவின் பேரில் நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தமிழரசன் தனது குழுவினருடன் விசாரணைக்காக, வேப்பூர் தாரா மெடிக்கலுக்கு 09-05-2022 அன்று சென்றார்.

அப்போது குழந்தைக்கு சிகிச்சை அளித்த சத்தியசீலனிடம் விசாரணை நடத்த முற்பட்ட போது, சத்தியசீலன் பின்வாசல் வழியாக தப்பி சென்று விட்டார்.

இந்த நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் அங்கிருந்த சான்றிதழ்களை கைப்பற்றி ஆய்வு செய்தார். வேப்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

ஆய்வில், டாக்டர் சத்தியசீலன் எம்டி(பொது மருத்துவம்) சர்க்கரை நோய், குழந்தைகள் மருத்துவம் படித்ததாக மருந்துச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சத்தியசீலன் போலி மருத்துவராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் 17-05-2022 அன்று சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், 1990-ம் ஆண்டு எம்பிபிஎஸ் முடித்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த சான்றிதழில் குறிப்பிட்ட முகவரியில் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அரசு மருத்துவர் விசாரணை நடத்தினார்.

அந்த முகவரியில் குறிப்பிடப்பட்ட டாக்டர் சத்தியசீலனின் தந்தை ஜெயசீலனிடம் விசாரித்த போது, டாக்டர் சத்தியசீலன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், சென்னை எழும்பூர் ஐ.சி.எச்-ல் குழந்தைகள் மருத்துவம் படித்துவிட்டு, தற்சமயம் இங்கிலாந்தில் உள்ள நார்த்தாம்டன் நகரில் பணிபுரிந்து வருகிறார் என கண்டறியப்பட்டது.

மருத்துவரின் அசல் மருத்துவ பதிவு சான்றிதழும் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்டது.

அந்த சான்றிதழையும் இங்கு வேப்பூரில் உள்ள சான்றிதழையும் ஒப்பிட்ட போது, வேப்பூரில் கடந்த ஐந்தாண்டுகளாக போலி மருத்துவர் சத்தியசீலன், இங்கிலாந்தில் உள்ள மருத்துவர் சத்தியசீலன் அவர்களின் சான்றிதழை போலியாக பயன்படுத்தி, மருத்துவம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டது.

ஆதலால் போலி மருத்துவர் சத்தியசீலன் மீது போலி மருத்துவ தடைச்சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

மேலும், போலியாக சான்றிதழ் தயாரித்தல் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சட்டம், ஏமாற்றுதல் ஐ.பி.சி. 420 பிரிவுகளின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க விசாரணை நடைபெற்று வருகிறது.

அசல் சான்றிதழ்களை இங்கிலாந்தில் உள்ள மருத்துவரிடம் பெற்று வழக்கின் உண்மைதன்மை டாக்டர் சாமிநாதன், அரசு மருத்துவமனை விருத்தாச்சலம், டாக்டர் குமார் அரசு மருத்துவமனை கடலூர் ஆகியோர் மூலம் கண்டறியப்பட்டது.

கடந்த 5 வருடங்களாக போலி மருத்துவர் சத்தியசீலன் போலி மருத்துவம் பார்த்துவந்துள்ளார்.

ஆனால், அவர் ஏதோ நேற்று தான் போலி மருத்துவம் செய்வதை போன்ற தோற்றத்தை முன்னாள் முதல்வர் உருவாக்கப்பார்க்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போதுதான் இந்த போலி மருத்துவர் 4 ஆண்டுகள் மருத்துவம் பார்த்துள்ளார். இது போன்ற போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் நமது அரசை குறை சொல்வது கண்டிக்கத்தக்கது.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு மக்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கும் போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.