செல்போன் சார்ஜரை போலதான் நிழல்கள் ரவியும். அவரிடம் பத்து நிமிஷம் பேசினாலே போதும், ஃபுல் எனர்ஜி நமக்கு ஏறிவிடும். அப்படி ஒரு உற்சாக குடோன் அவர். மணிரத்னத்தின் `பொன்னியின் செல்வன்’ படத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
`கே.ஜி.எஃப்.’ல உங்க வாய்ஸ் ஓவர் ரொம்ப பிரபலம். டப்பிங், வாய்ஸ் ஓவர் துறைக்குள் எப்படி வந்தீங்க?
“‘நிழல்கள்’ல நான் அறிமுகமாகுறதுக்கு முன்னாடி, பாரதிராஜா சார் அப்ப ‘நிறம் மாறாத பூக்கள்’ இயக்கிட்டு இருந்தார். அதோட டப்பிங் நடந்துட்டு இருந்துச்சு. ஒரு கேரக்டருக்கு வாய்ஸ் ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க. அப்ப பாரதிராஜா சார்கிட்ட ‘Shall I try?’ன்னு கேட்டேன். அப்ப வாய்ஸ் ஓவர், டப்பிங் இதைப் பத்தியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனாலும் முயற்சி பண்ணினேன். ‘நான் வேணும்னா பேச முயற்சி செய்யட்டுமா?’ன்னு கேட்டா, வெட்கமா ஃபீல் ஆகும்னுதான் அதையே ஆங்கிலத்துல கேட்டேன். டைரக்டரும் ஓகே சொல்லிட்டார். திரையில விஜயன் நடிச்சிட்டு இருக்கார். அதுக்கு நான் குரல் கொடுக்க ஆரம்பிக்கப் போகும் போது என் குரலைக் கேட்ட சவுண்ட் என்ஜீனியர்ஸ் ஆச்சரியமாகி ‘இவருக்கு மெட்டாலிக் வாய்ஸ்’னு சொன்னாங்க.
அப்புறம் அடுத்த நாள் போறப்ப அதே கேரடக்டருக்கு பாரதிராஜா சாரே வாய்ஸ் கொடுத்துட்டு இருந்தார். ‘மெட்டாலிக் வாய்ஸ்’னு நேத்து பாராட்டினாங்க. இன்னிக்கு இவர் உட்கார்ந்து பேசிட்டு இருக்காரேன்னு குழப்பமாகிடுச்சு. அப்பத்தான் பாரதிராஜா சார், ‘உங்க குரல் நல்லாதான் இருக்கு. ஆனா, விஜயன் பேசும் போது மலையாள வாடை இருக்கும். அந்தப் பாணி எனக்கு தெரியும்னால நான் பேசுறேன்’ன்னார். அதன்பிறகு அவரே கூப்பிட்டு ‘நிழல்கள்’ வாய்ப்பைக் கொடுத்தார். இப்ப எல்லாரும் அப்படிச் சொல்றது ஆச்சரியமில்ல. 1980கள்லேயே ‘மெட்டாலிக் வாய்ஸ்’னு சொல்லியிருக்காங்க. ‘கே.ஜி.எஃப்’ டப்பிங் பேசுறப்பவே இந்தப் படம் பெரிய வெற்றிபெறும்னு சொன்னேன். வசூலை சாக்குப்பையிலதான் அள்ளப்போறாங்கன்னு சொன்னேன். அது நடந்திருக்கு.”
ஹீரோவா அறிமுகமான நீங்க, திடீர்னு வில்லன், குணச்சித்திரம்னு ரூட்டை மாத்தினது ஏன்?
“‘நிழல்கள்’ முடிச்சதும் அடுத்து உடனடியா படங்கள் தேடி வரல. எட்டு மாசம் படங்களே வரல. இடையே பாரதிராஜா சாரை பார்க்கறப்ப ‘உன் திறமைக்கு நிறைய படங்கள் வரும்யா’ன்னு மோட்டிவேஷன் கொடுத்துட்டே இருப்பார். அப்புறம் எங்க மூத்த அண்ணன் சுந்தர்ராஜன்தான், ‘உன் கரியர் நடிப்புனு ஆகிடுச்சு. அதனால எந்த ரோல்னாலும் அதுல நடிச்சு பெயர் வாங்கு’னு சொன்னார். அது நியாயமாகவும் தெரிஞ்சது. அதனால தேடி வர்ற வாய்ப்புகளைத் தவறவிடாமல் பாத்துக்கிட்டேன்.”
நீங்களும் ரகுவரனும் நெருங்கிய நண்பர்கள்… உங்க ரெண்டு பேரின் நட்பு பத்தி சொல்லுங்க!
“ரகுவரனும் நானும் கோவையில வேற வேற காலேஜ்னாலும் ஒரே வருஷத்துலதான் படிப்பை முடிச்சோம். அவரோட அப்பா ஒரு தியேட்டர்ல கேன்டீன் வச்சிருந்தாங்க. அந்தத் தியேட்டர்ல அப்ப ஹாலிவுட்டின் கௌபாய்ஸ் படங்கள்தான் அதிகம் திரையிடுவாங்க. நானும், ரகுவும் கௌபாய்ஸ் மாதிரி கேப், டிரெஸ்ன்னு போட்டுட்டு திரிஞ்சிருக்கோம். ரெண்டு பேருமே ஒரே டைம்ல சினிமாவுக்கு முயற்சி பண்ணினோம். ரெண்டு பேருக்குமே முதல் படம் முடிச்சதும் அடுத்த பட வாய்ப்பு உடனடியா வரல. அதனால பைக்ல ரெண்டுபேருமே ஒண்ணா சுத்துவோம். அப்ப மலையாளத்துல ‘கக்கா’ படத்துல ரகு, நான், ரோகிணி எல்லாரும் சேர்ந்து நடிச்சோம். அதுலதான் ரோகிணியோட நட்பு ரகுவுக்குக் கிடைச்சது. ரகுவும் நானும் கிஷோர் குமார் பாடல்கள் கேட்போம். ஆலப்பில ஒரு மாசம் ஷூட்… அதுதான் ரகு, ரோகிணி காதல் தொடங்கின நேரம். அப்புறம் ‘மக்கள் என் பக்கம்’ ஷூட்டிங் அப்ப, நான் சத்யராஜ், ரகுன்னு மூணு பேரும் ஒண்ணா உட்கார்ந்து பேசி சிரிச்சிட்டு இருப்போம். ‘பூவிழி வாசலிலேயே’லே ரகுவரன் கையில ஒரு ஸ்டிக்கோடு வருவாரே… அந்த ஸ்டிக் ஐடியா நான் கொடுத்தது. அதைக் கேட்டதும் அடுத்த நாளே அவரே கடைக்கு போய் அந்த ஸ்டிக்கோடு வந்து, நடிச்சுக்காட்டினது இன்னும் பசுமையா நிழலாடுது.”