சிதம்பரம்: பேரறிவாளன் குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை; அவர் குற்றவாளிதான். கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? என போராட்ட களத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திமுகவை மறைமுக சாடினார்.
பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதை திமுக, அதிமுக உள்பட பல அரசியல் கட்சிகள் கொண்டாடி வருகின்றன. திமுக பேரறிவாளன் விடுதலைக்கு தாங்களே காரணம் என்று மார்தட்டி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, வாயில் வெள்ளைத்துணி கட்டி போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.
சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினர் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டியபடியும், வன்முறையை எதிர்ப்போம். கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது தீர்வாகாது என எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியும் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் முடிவடைந்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, ”உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை குற்றவாளி இல்லை என சொல்லி விடுதலை செய்யவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்தியதால்தான் நீதிமன்றம் விடுவித்து இருக்கிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் மனநிலையை நான் நன்கு அறிவேன். அதுபோல அனைவருக்கும் தாய், மனைவி, குழந்தைகள் உள்ளனர், தாய், மனைவி, குழந்தை போன்ற உறவுகள் உள்ளனர். அவர்கள் மனநிலையை நாம் பார்க்க வேண்டும். ராஜீவ் காந்தியோடு சேர்த்து 9 போலீசார் உள்ளிட்ட 17 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தலைவர் ராஜீவ் காந்திக்கும் குடும்பம் இருக்கிறது. சமூகம் இதை ஏற்றுக் கொள்ளுமா? ஒரு சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு என்பது இன்று கேள்விக்குறியாகி உள்ளது.
கன்றுக்குட்டி மீது தேரை ஏற்றியது தவறு எனக் கூறி தனது மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த பூமி இது. இங்கு கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வை கொண்டாடுவது நியாயமற்ற செயல். ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளன் மிக முக்கிய குற்றவாளி என விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், தமிழக சிறைகளில் 600 பேர் 700 பேர் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஏன் யாரும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
கொள்கை வேறு. கூட்டணி வேறு. எங்களது கொள்கைகளைப் பற்றி அவர்கள் ஏன் என்று கேட்கப்போவதில்லை. அவர்கள் கொள்கைகளைப் பற்றி நாங்கள் எதுவும் பேசுவதில்லை.
இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து பேசிய முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா, யுத்தம் என ஒன்று வந்தால் பலர் இறக்கத்தான் செய்வார்கள் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அது அவர்களது கொள்கை. அதுபோல் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. அவர்களது கொள்கையில் யாரும் தலையிட முடியாது.
இவ்வாறு கூறினார்.