சென்னை: பேரறிவாளன் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் அவரது விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல, திமுக இதை மாநிலம் முழுவதும் கொண்டாடி வருவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என திமுக அரசை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தவிர மற்ற அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளதுடன , பேரறிவாளன் விடுதலைக்கு நாங்கள்தான் காரணம் என போட்டிப்போட்டுக்கொண்டு மார்த்தட்டி வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன் விடுதலையை வரவேற்றதுடன், அவரை கட்டித்தழுவி வாழ்த்துதெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பேரறிவாளன் குற்றவாளி இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறாத நிலையில், அவருடன் ஒரு மாநில முதல்வரும் கட்சியும் அதிகம் நெருக்கம் காட்டி வருவது தமிழகஅரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பேரறிவாளன் விடுதலையை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, பேரறிவாளன் விவகாரத்தில், உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை பாஜக ஏற்கிறது. ஆனால், சரித்திரத்தை மறக்க கூடாது, நம் மண்ணில் நடந்ததையும் நாம் மறக்க கூடாது. ராஜீவ் காந்தி, அவருடன் சேர்ந்து மனித வெடிகுண்டில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக 8 காவலர்கள் மற்றும் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் இஃபால், அவரது பிறந்தநாள் அன்றே இறந்துள்ளார். அவர்களுக்கு நியாயம் நீதி இல்லையா என கேள்வி எழுப்பினார்.
இந்த விஷயத்தில் பேரறிவாளன் குற்றவாளிதான். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் என்பதை மறுக்க முடியாது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என குறிப்பிடவில்லை. நிரபராதிகளை விடுதலை செய்தது போல், முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டாடி வருகிறார்.
உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிக நுணுக்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் விடுதலை செய்யப்பட்டவர் கொண்டாடப்பட வேண்டியவர் கிடையாது என்பதை சுட்டிக்காட்டினார். பேரறிவாளனை தியாகி போல் தமிழ்நாடு முழுவதும் எடுத்து சென்று ஒரு சாதனை செய்தது போல திமுக கொண்டாடி வருகிறது. இது, திமுக வரலாற்றில் ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பான கேள்விக்கு பதில் கூறிய அண்ணாமலை, இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க திமுகவே காரணம் என்று குற்றம் சாட்டியதுடன், அந்த கல்குவாரியின் உரிமையாளர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர். அவர் திமுக அரசின் ஒத்துழைப்புடன் விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளார். அதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டியவர், காங்கிரஸ் கட்சிக்கு ஆளுமை இருந்தால், திமுகவுக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பேரறிவாளன் சுதந்திரப் போராட்ட தியாகியா? நாங்கள் தமிழர்கள் இல்லையா! கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டோர்…