பிரித்தானியாவில் இருந்து ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் உயிரை மாய்த்துக்கொள்வேன் என அகதி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சூடானில் இருந்து 6 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாக வந்தவர் தற்போது ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுபவர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது குடும்பத்திற்கு உயில் மற்றும் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய கொள்கைக்கு எதிராக ஆர்வலர்கள் சட்டரீதியான சவால்களை முன்வைத்ததை அடுத்து போரிஸ் அரசாங்கம் குறித்த நடவடிக்கைகளை தாமதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஆனால், தங்களது கொள்கையில் உறுதியாக இருப்பதாக உள்துறை செயலாளர் பிரிதி படேல் புதன்கிழமை தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே சூடான் நாட்டவரான அலி, நாடுகடத்தப்படுவதற்கு முன்னர் உயிரை மாய்த்துக்கொள்ளவும் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐரோப்பா கண்டம் வழியாக கலேஸுக்குச் செல்வதற்கு முன்பு லிபியாவில் இரண்டு ஆண்டுகள் தடுப்புக்காவலில் இருந்ததாகவும், அங்கு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறினார்.
படகில் கால்வாயைக் கடப்பதற்கு முன்பு அவர் ஏழு மாதங்கள் அங்கே காத்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ருவாண்டாவுக்கு அனுப்பப்பட இருப்பது தெரியாமல் போனது என அலி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 8,697 பேர் சிறிய படகுகளில் பிரான்சில் இருந்து இங்கிலாந்து சென்றடைந்துள்ளனர் என்று பத்திரிக்கையாளர் சங்கத்தின் அரசாங்க தரவுகளின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.