சென்னை: “எனது விடுதலைக்கு முழுக்க முழுக்க அண்ணன் வைகோதான் காரணம்” என்று பேரறிவாளன் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் மற்றும் அவரது தயார் அற்புதம் அம்மாள் ஆகியோர் இன்று காலை, சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேரறிவாளன் கூறுகையில், “இந்த விடுதலைக்கு முழுக்க முழுக்க அண்ணன் வைகோ காரணமாக இருந்தார். அதற்கு நன்றி கூறுவதற்காகத்தான் வந்தோம். நேற்றைக்கே இங்கே வர நினைத்தோம். ஆனால், நேரம் ஆகிவிட்டது.
இந்தியாவின் தலை சிறந்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை அழைத்து வந்து வாதாடச் செய்தார். அவர், சிறைக்குச் சென்று கைதிகளைப் பார்க்கின்ற வழக்கம் இல்லை. ஆனால், வேலூர் சிறைக்கு வந்து எங்களைப் பார்த்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடி, தூக்குத் தண்டனைக்குத் தடை ஆணை பெற்றுக் கொடுத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் அத்தனை அமர்வுகளிலும் பங்கேற்று வாதாடினார். அவருடைய வாதங்கள்தான், எங்கள் விடுதலைக்கு வழிகாட்டியது. ஜெத்மலானி தற்போது உயிரோடு இல்லை. ஆனால், அவர் செய்த உதவியை நாங்கள் என்றைக்கும் மறக்க முடியாது” என்று தெரிவித்தார்.