செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் உள்ள ஒரத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நெல் வியாபாரி ரமேஷ். இவர் அந்த பகுதிகளில் வாங்கும் நெல் முட்டைகளை, தென்காசியைச் சேர்ந்த நெல் வியாபாரி பால்ராஜ் என்பவருக்கு விற்பனை செய்துவந்துள்ளார். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் அனைத்தும் சுமுகமாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், பால்ராஜ் திடீரென பணத்தைச் சரிவரக் கொடுக்காமலிருந்துள்ளார்.
பால்ராஜ் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ரமேஷுக்கு பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத ரமேஷ், பால்ராஜிடம் பணத்தைத் தரவேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளார். இருந்தபோதிலும், பணத்தைத் திரும்பித் தர அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்த நிலையில், பால்ராஜைப் பேசி சம்மதிக்கவைத்து தனது கிராமத்துக்கு வரவைத்துள்ளார் ரமேஷ்.
அவர் வந்ததுமே, இருவரும் அருகில் உள்ள அனந்தமங்கலம் குன்று பகுதியில் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒருகட்டத்தில் தகராறு முற்ற, ரமேஷ் தான் வைத்திருந்த துண்டைவைத்து பால்ராஜின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ரமேஷ் ஒரத்தி பகுதி காவல்நிலையத்தில் நடந்ததைச் சொல்லி சரணடைந்திருக்கிறார். அவரைக் கைதுசெய்த போலீஸார், பால்ராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
கடன் பாக்கிக்காக நெல் வியாபாரி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.