ஆ.இரா. வேங்கடாசலபதி, சந்துருவுக்கு ‘இயல்’ விருது அறிவிப்பு; ஸ்டாலின் வாழ்த்து

எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’ வாழ்நாள் சாதனையாளர் விருதும் நீதிபதி சந்துருவுக்கு நானும் நீதிபதியானேன் நூலுக்கு கட்டுரைக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் இலக்கிய ஆய்வாளர், வரலாற்றாசிரியர், பதிப்பாசிரியர், பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் – வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புனைவு இலக்கியத்திற்கான இயல் விருது பா.அ. ஜெயகரனுக்கும், கவிதைக்கான விருது ஆழியாளுக்கும் கட்டுரைக்கான விருது முன்னாள் நீதிபதி சந்துருவுக்கும் மொழியாக்கத்திற்கான விருது மார்த்தா ஆன் செல்ஃபிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு ‘இயல்’ வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு எழுதிய நானும் நீதிபதியானேன் நூலுக்கு கனடா இலக்கியத் தோட்டத்தின் கட்டுரைக்கான ‘இயல்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தமிழ் – ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையைக் கொண்டவருமான ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’- வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்!

‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற தன்வரலாற்று நூலுக்காக புனைவிலிப் பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள முன்னாள் நீதியரசர் கே. சந்துரு அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செந்தமிழைத் செழுந்தமிழாக்கும் படைப்புகளையும் ஆய்வுகளையும் தொடர்ந்து தருக!” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயல் விருது பெறும் எழுத்தாளர் எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி, முன்னாள் சந்துரு இருவருக்கும் எழுத்தாளர்கள் வாசகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் டி.ஐ. அரவிந்தன், இயல் விருது பெறும் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“சலபதியின் வரலாற்று ஆய்வு முறையும் ஆய்வு முடிவுகளைத் தொகுக்கும் முறையும் சர்வதேசத் தரத்திலானவை. இவர் வரலாற்றை எழுதும் முறை அதன் பன்முகப் பரிமாணங்களை வெளிக்கொணர்வதோடு, படைப்பூக்கமும் கொண்டது.

“வாண வேடிக்கைக்காரனைப் போல் வெடித்துக்காட்டும் தேர்ந்த தகவல்களின் தெறிப்பு, அதன் மூலம் திரளும் கருதுகோள், கடந்த காலமும் நிகழ்காலமும் இணையும் விந்தை, தனிமனித வரலாற்றை ஊடறுத்துச் செல்லும் பாரிய சமூக வரலாற்றுப் போக்குகளின் அசைவியக்கம் ஆகிய அனைத்தும் இணைந்து ஆர்வமுள்ள வாசகனைக் கொக்கி போட்டு ஈர்க்கும் ஒரு மொழிநடை.”

வரலாற்றாய்வாளர் எரிக் ஹாப்ஸ்பாமின் படைப்புகள் பற்றிச் சலபதி எழுதியது இது. கிட்டத்தட்டச் சலபதியின் படைப்புகளுக்கும் இது பொருந்தும்.

வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது பெறும் நண்பர் சலபதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்று டி.ஐ. அரவிந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயல் விருது பெறும் டாக்டர் ஆ. இரா. வெங்கடாசலபதிக்கு எழுத்தாளர், கலை விமர்சகர், கவிஞர் இந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எழுத்தாளர் இந்திரன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “டாக்டர் ஆ. இரா. வெங்கடாசலபதி எனது இளமைக்கால நண்பர். அன்று நாங்கள் இருவரும் கண்ட கனவுகளில் பலவற்றை சலபதி சிந்தாத சிதறாத தொடர் உழைப்பின் மூலமாக நனவாக்கியவர். முகம் மாமணி, புலவர் தா. கோவேந்தன் ஆகியோரால் இளமையிலேயே திறமை உள்ளவர் என்று கண்டுபிடிக்கப்பட்டு இன்று பல்வேறு ஆய்வு பங்களிப்புகளைச் செய்த சிறந்த ஆய்வாளராகத் திகழ்கிறார். சலபதி மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.