திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மலக்கப்பாரா அருகே உள்ள பெரும்பராவைச் சேர்ந்தவர் சிந்து (வயது 23), கல்லூரி மாணவியான இவர், திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆகியுள்ளார்.
இந்தநிலையில் அவருக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் சுகாதார பணியாளர் ஒருவரின் உதவியை சிந்து நாடியுள்ளார்.
அவருக்கு சிந்துவின் உடல்நிலையில் சந்தேகம் ஏற்பட்டது. திருமணமாகாத அவருக்கு இப்படி ஏன் ஏற்பட்டது என சந்தேகம் கொண்ட அவர், போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததாகவும் அந்தக் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாகவும் சிந்து கூறினார்.
ஆனால் குழந்தையின் உடல் எங்கே என்பது குறித்து சிந்து சரியாக கூறவில்லை. இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள கால்வாயில் இருந்து பச்சிளம் ஆண் குழந்தை உடலை போலீசார் கைப்பற்றினர்.
எனவே குழந்தை உடலை சிந்து தான் கால்வாயில் வீசி கொன்று இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று குழந்தையின் பிரேதப் பரிசோதனை முடிவு வெளியானது. அதில் மூச்சுத்திணறி குழந்தை இறந்திருப்பதாக தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் சிந்து மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.