“எங்கள் விசாரணையிலிருந்து உங்களுக்கு ஒன்றை நான் தெளிவாக கூறுகிறேன்… இது வெறுப்பினால் நடத்தப்பட்ட குற்றம், இனரீதியாக தூண்டப்பட்ட தீவிரவாத செயல்” – டாப்ஸ் சூப்பர் மார்க்கெட் துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்க எப்பிஐ (FBI) இயக்குநர் கிறிஸ்டோபர் செய்தியாளர்களிடம் கூறியது.
கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் நடந்த அந்த பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டினால் கருப்பின அமெரிக்கர்கள் பெரும் பதற்றதிற்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாகி இருக்கிறார்கள். ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு பின் நடந்த போராட்டங்கள் அமெரிக்காவில் நிலவும் இன வெறி மனநிலையை மாற்றவில்லை என்பதே அவர்களின் பதற்றத்திற்கான முக்கிய காரணம்.
கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க போலீஸ் அதிகாரி ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட அமெரிக்க கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட்டை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது, ஜார்ஜ் பிளாய்ட்டின் கொலை உலகம் முழுவதும் அதிர்வலையை உண்டாக்கியது. அமெரிக்கா முழுவதும் இனவெறி தாக்குதலுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன.
இதன் முடிவில் ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த அமெரிக்க காவல் அதிகாரி டெரக் சாவின் குற்றவாளி என மினிபோலிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு சிறைத் தண்டனை விதித்தது. இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட அதே மாதத்தில் மீண்டும் ஒரு இனவெறி தாக்குதல் அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த மே 14-ஆம் தேதி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த டாப்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த, 18 வயதான பேட்டன் ஜென்ட்ரான் என்ற இளைஞர், அங்கிருந்த கருப்பின மக்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார். இந்தத் தாக்குதலில் அமெரிக்க கருப்பின மக்கள் 10 பேர் பலியாகின்றனர். 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருப்பின மக்களுக்கு எதிரான இந்தப் படுகொலையை பேட்டன் ஜென்ட்ரான் சட்டென்று நிகழ்த்தவில்லை. நிதானமாக, தெளிவாகத் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை அவர் நிகழ்த்தி இருக்கிறார் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இனவெறி படுகொலையை நிகழ்த்துவதற்கு 5 மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டிருக்கிறார் பேட்டன். இதற்காக அவ்வப்போது பஃப்பலோவில் அமைந்துள்ள டாப்ஸ் சூப்பர் மார்க்கெட் சென்று அங்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்று நோட்டமிட்டுள்ளார். சூப்பர் மார்க்கெட்டின் இடங்கள் குறித்த வரைபட விவரங்களை பேட்டன் தயார் செய்து வைத்திருந்துள்ளார்.
இத்துடன் பேட்டன் பற்றிய கூடுதல் தகவலும் கண்டறியப்பட்டுள்ளது. அதில் இனவெறி தொடர்பாக பல கருத்துகளை பேட்டன் தனது சிறுவயது முதலே தனது தனிப்பட்ட குறிப்புகளில் பதிவு செய்து வந்திருக்கிறார். குறிப்பாக அரசியல் நோக்கத்திற்காக வெள்ளையர்களுக்கு மாற்றாக அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட இனம்தான் கருப்பினம் என்ற போலி இனவாத கருத்தியலை அவர் தீர்க்கமாக நம்பியுள்ளார்.
இதுவே பேட்டனின் மனதில் கருப்பின மக்கள் குறித்த வெறுப்புணர்வு உருவாகி, தீவிரவமாக பரவ காரணமாகி உள்ளது. இந்த கருத்தியலின் அடிப்படையிலேயே பேட்டன் தனது பதின் பருவங்களில் இயங்கி உள்ளார். அதுவே இந்த இனவெறி கொலைக்கு காரணமாகி இருக்கிறது. டாப்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு முன்னர், பள்ளி ஒன்றைதான் பேட்டன் தேர்வு செய்திருக்கிறார். ஆனால் குழந்தைகளை கொல்லும் முடிவை தான் விரும்பவில்லை என்பதையும் பேட்டன் தனது குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
சனிக்கிழமை நிகழ்த்தப்பட்டது பேட்டனை பொறுத்தவரையில் படுகொலைகள் அல்ல, அவை தண்டனைகள். கருப்பின மக்களுக்கு தண்டனை வழங்கப் போவதாக எண்ணியே துப்பாக்கியும் வாங்கி உள்ளார். அமெரிக்க ராணுவ உடையை அணிந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். அதனை சமூக வலைதள பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பும் செய்திருக்கிறார்.
அமெரிக்காவை பொறுத்தவரை இனவெறித் தாக்குதல் புதிதல்ல. அதற்கு நீண்ட நெடும் கோரமான வரலாறு உண்டு. ஆனால் கரோனாவிற்கு பிறகான காலகட்டத்தில் இனவெறி சார்ந்த மன நிலை மக்களிடம் அதிகரித்துள்ளதாக சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கரோனா காலம்தான் பேட்டனை முற்றிலும் மாற்றியுள்ளது. அவருக்கு உளவியல் சிகிச்சைகள் தேவை என்று அவரை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில் டாப்ஸ் சூப்பர் மார்க்கெட் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்க துப்பாக்கி கலாசாரம்: அமெரிக்காவில் சாமானிய மக்கள் துப்பாக்கி வைத்திருப்பது என்பது அவர்களது அடிப்படை உரிமைகளில் ஒன்று. இது தொடர்பான சட்ட திருத்தம் 220 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த சட்ட திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட பொதுமக்களின் ஆயுத உரிமை தற்போது கடும் எதிர்வினைகளை சந்தித்து வருகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 43 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் துப்பாக்கியால் மரணம் அடைந்திருக்கிறார்கள். அதில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 24,292. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 19,384. இவ்வாறு நாளும் அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி படுகொலைகளுக்கு எதிராக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடுமையான குரல் கொடுத்தும், இதுவரை அரசு செவி சாய்ப்பதாக தெரியவில்லை. தற்போது அமெரிக்க அதிபராக உள்ள பைடன் வரையும் இந்த கதை தான் நிலவுகிறது.
உலகில் பரவும் இனவெறி : அமெரிக்கா மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் இனவெறி தாக்குதல்கள் நாளும் அதிகரித்து வருகின்றன. இனம், மொழி, நிறம், மதம் சார்ந்து மக்கள் வெறுப்பால் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசியல், இதில் பெரும் வங்கு வகிக்கின்றது. பிரித்து ஆள்.. கொள்கையை தான் அரசியல் தலைவர்கள் பலரும் முன்வைக்கின்றனர். அதற்கு சில காலம் மக்கள் பழியாக்கப் பட்டிருக்கின்றனர். ஆனால் இது நீண்ட காலம் பலனளிப்பது இல்லை. நிகழ்காலத்தில் ட்ரம்ப்பின் வீழ்ச்சியும், ஜெசிந்தா ஆர்டென்னின் வெற்றியும் அதைத் தான் நமக்கு காட்டியுள்ளன. உலகின் வரலாறு அதுவே..!
தொடர்புக்கு: [email protected]