வேலூர்: தமிழக – ஆந்திர எல்லையில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோடைக் காலத்தில் பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு 660 கன அடிக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் இயல்பை விட 3 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். வழக்கத்தைக் காட்டிலும் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்த நிலையில் அக்னி நட்சத்திரமும் இணைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
கடந்த சில நாட்களாக, சமீபத்திய அசானி புயல் மற்றும் வெப்பச்சலனத்தின் காரணாமக தமிழக – ஆந்திர எல்லையோர மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பரவலான கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைந்து, கடந்த 10-ம் தேதி 87.4 டிகிரி பாரன் ஹீட்டாக இருந்தது. தொடர் மழையால் வியாழக்கிழமை வரை வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் குறைவாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கவுன்டன்யாவில் மழை:
தமிழக – ஆந்திர எல்லையில் பரந்து விரிந்துள்ள கவுன்டன்யா வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மோர்தானா அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் 31 கன அடி அளவுக்கு கவுன்டன்யா ஆற்றில் வெளியேறி வருகிறது. வெள்ள நீர் குடியாத்தம் நகர தரைப்பாலத்துக்கு மேலாக வியாழக்கிழமை காலை கடந்து சென்றது.
ஏற்கெனவே சேதமடைந்த தரைப்பாலம் என்பதால் போக்குவரத்துக்காக தற்காலிகமாக அதனை சீரமைத்திருந்தனர். வியாழக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் வழியாக செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், காமராஜர் பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அங்குள்ள திருவிழா கடைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் வெள்ள நீரை மாற்றுப் பாதையில் திருப்பி தரைப்பாலத்தை மீண்டும் தற்காலிகமாக சீரமைத்தனர். தரைப்பாலத்தில் மாலை மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
கோடையில் பாலாற்று வெள்ளம்:
கோடை காலத்தில் எப்போதும் வறண்டு காணப்படும் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு வரும் நிலையில், கோடை மழை வெள்ளத்தால் விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தின் வழியாக ஆர்ப்பரித்துச் செல்லும் பாலாற்றின் கோடை வெள்ளத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
கோடை வெள்ளத்தை விவவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். தொடர் மழையின் காரணமாக பொன்னை ஆற்றைத் தவிர்த்து மற்ற பாலாற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலவரப்படி வேலூர் பாலாற்றில் 660 கன அடி அளவுக்கு வெள்ள நீர் சென்றது. கவுன்டன்யா ஆற்றில் 31 கன அடி நீர் வரும் நிலையில், ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் பெய்த கன மழையால் அகரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 340 கன அடி அளவுக்கு வெட்டுவானம் அருகே பாலாற்றில் கலந்தது.
அதேபோல், ஆந்திர வனப்பகுதியில் பெய்த மழையால் புல்லூர் தடுப்பணையை கடந்து 170 கன அடிக்கு வெள்ள நீர் தமிழக பாலாற்றில் வந்து கொண்டிருக்கிறது. வாணியம்பாடி அருகேயுள்ள மண்ணாற்றில் இருந்து 40 கன அடிக்கும், ஆம்பூர் அருகேயுள்ள ஆணைமடுகு, வெல்லக்கல் கானாறு, கண்டிதோப்பு கானாற்றில் இருந்து சுமார் 25 கன அடி அளவுக்கு பாலாற்றுக்கு நீர்வந்து கொண்டிருக்கிறது.