சென்னை: படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய மாணவி சிந்துவிற்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கோடம்பாக்கம், வெள்ளாள தெருவை சேர்ந்தவர் சக்தி (43). இவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தேவி (36). இவர்களுக்கு சிந்து என்ற பெண் உள்ளார்.
கடந்த 2020 டிசம்பரில், தோழி வீட்டின் மூன்றாவது மாடியில் சிந்து விளையாடியபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருடைய இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன. தாடையின் ஒரு பகுதி முழுவதும் சேதமைடைந்தது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், உயிர் தப்பிய சிந்து இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே உள்ளார். இந்நிலையில், ஆசிரியர்கள், தோழியர் உதவியுடன், வீட்டில் இருந்தப்படி படித்து, சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதினார்.
இது தொடர்பான செய்தி, அவரது தந்தை பேட்டியுடன் இந்த தமிழ் திசை, இணையதளத்தில் வெளியானது. இந்த நிலையில், மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிந்து நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்ப மருத்துவர் கொண்ட குழு சிகிச்சை அளிக்க உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது:
“சிந்துவுக்கு இரண்டு கால்கள் உடைந்தும், பல்வேறு இடங்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும், கிருமி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் நேரடியாக தொடர்ந்து, நிபுணத்துவம் வாய்ந்த அரசு டாக்டர்களை கொண்டு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். நேற்று பல்துறை அடங்கிய பரிசோதனை சிந்துவுக்கு மேற்கொள்ளப்பட்டது.
இன்று, ஸ்டான்லி மற்றும் சென்னை பல் மருத்துவமனையில் இருந்து சில டாக்டர்கள் வர உள்ளனர். அவர்களும், சிந்துவை பரிசோதித்து, சிகிச்சை நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க உள்ளனர். முதற்கட்டமாக சிந்துவை நடக்க வைக்கவும், அதன்பின் அவரை சாப்பிட வைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.