தமிழகத்தில் விரைவில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

மதுரை:

தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை மதுரை வந்தார். பின்னர் அவர் ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகே தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், புதிய சாலை மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து எ.வ.வேலு மதுரை நத்தம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை பாலம் கட்டும் பணிக்கு திட்ட மதிப்பீடு நடந்து வருகிறது. தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், கலைஞர் நூலக கட்டிடப் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

அங்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி மேற்பார்வையில் கட்டிட வேலை நடந்து வருகிறது. இது ஜூன் மாதத்திற்குள் முடிந்து விடும். தற்போது 90 சதவீதம் கட்டிட பணி முடிந்து உள்ளது.

அடுத்தபடியாக கட்டிடங்களின் உள்அலங்கார வேலைகள் நடக்க உள்ளது. கலைஞர் நூலகம் என்பதால் பணிகள் விரைந்து நடப்பதாக கூறுவது உண்மை அல்ல.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம்.

கோரிப்பாளையம் பகுதியில் கட்டப்பட உள்ள மேம்பாலத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடும் பணிதான் நடக்க வேண்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மேயர் இந்திராணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு சம்மந்தமாக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து தீர்மானம் நிறைவேற்றியது. இது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக கவர்னர் ரவி, புதுடெல்லி செல்கிறார். எனவே தமிழக அரசின் கோரிக்கை பரிசீலை செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் நல்ல தகவல் எதிர்பார்க்கலாம். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படித்து டாக்டர் ஆகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.