பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல அவர்களின் இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு எஸ். ஜகத் சமரவிக்ரம நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய பொலொன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அமரகீர்த்தி அத்துகோரல அவர்களின் இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு எஸ். ஜகத் சமரவிக்ரம அவர்கள் இன்று (19) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் உறுதியுரையை எடுத்தார்.

அதனை அடுத்து அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க முன்னிலையில் உறுப்பினர்களின் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

அண்மையில் இடம்பெற்ற மோதல் சூழ்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய பொலொன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அமரகீர்த்தி அத்துகோரல அவர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், இதனால் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பாண்மையில் வெற்றிடமொன்று ஏற்பட்டது. இந்த வெற்றிடத்துக்கு எஸ். ஜகத் சமரவிக்ரம அவர்களின் பெயரை குறிப்பிட்டு அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கடந்த 17ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது. அதற்கமைய, எஸ். ஜகத் சமரவிக்ரம அவர்கள் இன்று ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக உறுதியுரை எடுத்தார்.

ஜகத் சமரவிக்ரம அவர்கள் மொனராகலை கவுடாவ தேசிய பாடசாலை மற்றும் சிரிபுர மத்திய கல்லூரியின் பழையமானவராவார். அவர் 2008 முதல் 2015 வரை திம்புலாகல பிரதேச சபையின் தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும், திம்புலாகல வெலிகந்த தெகொடபத்துவ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளராக அவர் தற்பொழுது பணியாற்றிவருகிறார். கடந்த பொதுத் தேர்தலில் அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பொலொன்னறுவை மாவட்டத்தில் ஐந்தாவது இடத்தை பெற்றிருந்தார்.

பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)

இலங்கை பாராளுமன்றம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.