வங்காளதேசம், இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது

சட்டோகிராம்:
வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 397 ரன்னில் ஆல் அவுட்டானது. ஏஞ்சலோ மேத்யூஸ் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் ஆட்டமிழந்தார். 
வங்காளதேசம் சார்பில் நயீம் ஹசன் 6 விக்கெட், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமீம் இக்பால் சதமடித்து 133 ரன்னில் ஆட்டமிழந்தார்.
முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்னிலும், லிட்டன் தாஸ் 88 ரன்னிலும், ஹசன் ஜாய் 58 ரன்னிலும் வெளியேறினர்.
இலங்கை சார்பில் காசன் ரஜிதா 4 விக்கெட், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட் வீழ்த்தினர். 
இதையடுத்து, 68 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை அணி 2வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் கருணரத்னே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், 5ம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. டிக்வெலா 61 ரன்னுடனும், சண்டிமால் 39 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது.
ஆட்ட நாயகன் விருது ஏஞ்சலோ மேத்யூசுக்கு அளிக்கப்பட்டது. 
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி டாக்காவில் நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.