தஞ்சாவூரில் 3 டன் அளவிலான குட்கா பறிமுதல் செய்த போலீசார் சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்து உள்ளனர்.
தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் போதைப் பொருட்களான குட்கா, பான்மசாலா அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தஞ்சாவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில் இன்று காலை தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றில் சோதனை செய்ததில், அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாஉள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் தஞ்சாவூர் பிருந்தாவனம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் மூட்டை மூட்டையாக போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களையும், சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 15 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.