Ratan Tata Tamil News: இந்தியாவில் உள்ள சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக தொழிலதிபர் “ரத்தன் டாடா” வலம் வருகிறார். தற்போது டாடா குழுமத்தின் சேர்மனாக உள்ள இவர் கோடிக்கணக்கான இளைஞர்களின் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். அவர் குறித்து பேச வாய் திறக்கும் போது அவரது எளிமையை எளிதில் கடந்து பேசிவிட முடியாது. அந்த அளவிற்கு பண்பும் ஒழுக்கமுடையவராக அவர் இருந்து வருகிறார்.
டாடா குழுமத்திற்காக தனது பல ஆண்டுகால கடின உழைப்பை போட்ட ரத்தன் டாடா அந்த நிறுவனத்தை உலகெங்கிலும் உள்ள முக்கிய நாடுகளில் கால் பதிக்க செய்தவர். மேலும், இவரது தலைமையிலான டாடா குழுமம் பல நாட்டு பொருளாதரத்தில் ஆழமான வேரூன்றியது என்றால் நிச்சயம் மிகையாகாது. இவர் அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக செயலாற்றிய காலத்தில் தான் “டாடா நேனோ” (TATA NANO) எனக் கூறப்படும் மலிவு விலை கார் சந்தைப்படுத்தப்பட்டது.
கார் என்றாலே அது வசதியானவர்களுக்கு மட்டுமே என்கிற சூழல் நிலவிய அந்த காலத்தில் ரூபாய் ஒரு லட்சத்திற்கு காரை அறிமுகம் செய்து, ஆட்டோமொபைல் உலகில் புரட்சியை ஏற்படுத்தினார். இந்த நேனோ கார் வர்த்தக ரீதியாக மற்ற கார்களுடன் போட்டிபோட முடியாவிட்டாலும், பாமர மக்களுக்கான கார் என்று இன்றளவும் புகழப்படும் அளவிற்கு சிறந்ததாக தயாரிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இந்த காம்பாக்ட் காரை தயாரிப்பதற்காக தனக்கு கிடைத்த உத்வேகம் குறித்து நெகிழந்து இருந்தார். அதில், இந்திய குடும்பங்கள் ஸ்கூட்டரில் செல்வதும், ஸ்கூட்டரில் தாய்க்கும் தந்தைக்கும் நடுவே பிள்ளைகள் சிக்கிக்கொண்டிருப்பதும் தான் நானோவுக்கான ஆசையை தூண்டியது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஆரம்பத்தில் இரு சக்கர வாகனங்களை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவது குறித்து தனது குழு யோசித்ததாகவும் அடுத்தடுத்த டூடுல்கள் ஜன்னல்கள் அல்லது கதவுகள் இல்லாமல் நான்கு சக்கர வாகனமாக மாற்றப்பட்டது. இறுதியில், டூடுல்கள் டாடா நானோவாக மாறியது என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் மும்பை தாஜ் ஹோட்டலுக்கு ரத்தன் டாடா “டாடா நேனோ” காரில் சென்ற வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
108 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனத்தை உருவாக்கிய ரத்தன் டாடா, டாடா குழும சொத்துக்கள் அனைத்தும் குடும்ப டிரஸ்ட் அமைப்புக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ரத்தன் டாடா தனது சொந்த முதலீட்டு வாயிலாகச் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவரிடம் ஜாகுவார் முதல் ஃபெராரி வரையிலான ஆடம்பர கார்களும் உள்ளன.
ரத்தன் டாடா நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் ஆடம்பரமாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அவரோ நேனோ கார் மூலம் மிகவும் எளிமையாக, எந்தவித பரபரப்பும் இல்லாமல் தாஜ் ஹோட்டலுக்கு வந்துள்ளார். மேலும், தனது பாதுகாப்புக்கு பார்டிகார்ட்ஸ் கூட இல்லாமல் எளிமையாக உதவியாளர் ஷாந்தனுவுடன் சென்றுள்ளார்.
இந்த நிகழ்வு வீடியோவாக பதிவிடப்பட்டு இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. விலைமதிப்புமிக்க உடையை கூட உடுத்த தவிர்க்க நினைக்கும் அந்த மாமனிதர் தற்போது பயன்படுத்தும் இந்த எலக்ட்ரிக் நேனோ கார் எலக்ட்ரா EV என்ற நிறுவனம் அவருக்கு பரிசாக அளித்ததாம். அவரின் எளிமை பண்பை எப்போதும் பாராட்டி வரும் நெட்டிசன்கள் தற்போது அவர் டாடா நேனோ காரில் வந்து இறங்கியதை பாராட்டியும் கொண்டாடியும் வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil