ஜி.எஸ்.டி. தொடர்பான வழக்கு
இந்தியாவுக்கு வெளியே, வரி விதிக்க முடியாத பிராந்தியத்தில் இருந்து நாட்டின் சுங்கச்சாவடிகளை நோக்கி வரும் கப்பல்களின் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி 5 சதவீத வரி விதிக்க முடியாது என குஜராத் ஐகோர்ட்டு தெரிவித்தது. மேலும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை விதிக்கும் வகை செய்யும் மத்திய அரசின் அறிவிக்கையையும் ரத்து செய்தது.
குஜராத் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மற்றும் ஜி.எஸ்.டி. கவுன்சில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நேற்று கூறியது.
இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:-
மத்திய, மாநில அரசுக்கு சம அதிகாரம்
ஜி.எஸ்.டி. சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரங்களை அரசியலமைப்பு சாசனம் 246ஏ பிரிவு வழங்குகிறது. மத்திய, மாநில அரசுகளிடையே முடிவு எடுக்கும் விவகாரத்தில் எல்லா நேரத்திலும் ஒரு அரசுக்கு மட்டுமே முடிவு எடுப்பதில் அதிகாரம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நடைமுறை தீர்வுகளை எட்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் இணக்கமாக செயல்பட வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசுகளும் சமம் என அரசியலமைப்பு சாசனம் 246ஏ பிரிவு கூறுகிறது. அதேசமயம் அரசியலமைப்பு சாசனம் 279-வது பிரிவு மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றுக்கொன்று சுயமாக செயல்படக்கூடாது என கூறுகிறது.
இந்திய கூட்டாட்சி முறை என்பது ஒத்துழைப்புக்கும், ஒத்துழையாமைக்கும் இடையே நடைபெறும் உரையாடலாகும். மத்திய அரசும், மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சட்டங்களை ஏற்றும்போது ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்க 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டத்தில் இடம் இல்லை என்றாலும், முரண்பாடுகள் எழும்போதெல்லாம், உரிய அறிவுரைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் வழங்க வேண்டும்.
கட்டுப்படுத்தாது
இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பை கொண்ட நாடு என்பதால் ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைகள் வலியுறுத்தும் தன்மை கொண்டதாக மட்டுமே இருக்கிறது.
ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும். எனவே இந்த விவகாரத்தில் குஜராத் ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.