விருதுநகர்:
விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பேரியம் உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதனை தடுக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலைகளை தொடர் ஆய்வு செய்ய வருவாய்த்துறை, போலீஸ் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி ஆய்வுகளில் சிறிய அளவிலான விதிமீறல் கண்டறியப்பட்ட இடங்களில் தொடர்புடைய 406 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்படும். அதிக அளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இடங்களில் தொடர்புடைய 174 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களிலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்தும் விதமாக ஆய்வு குழுக்கள் மூலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு