மதுரை: கலைஞர் நூலகம் கட்டுமானப் பணியை பொறுத்தவரையில் 90 சதவீதம் முடிந்துள்ளது என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மதுரை விவசாய கல்லூரி அருகே முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைக்கும் பணி பூஜை, கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப் பணிகள் ஆய்வு போன்ற நிகழ்ச்சிகளில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எவ.வேலு கலந்து கொண்டார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப் பணிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தரமாக அமைக்கப்படுகிறது. இன்றைய சூழலில் இதுபோன்ற கட்டிடங்கள் கட்டுவது சிரமம். ஜூன் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிடும். அதன்பிறகு கட்டிடத்தின் உள் அலங்காரப் பணிகள் நடக்கும். அது சம்பந்தமான வல்லுநர்களிடம் ஆலோசனை செய்தேன். அவர்கள் கூறிய தகவல்களை முதல்வரிடம் தெரிவிக்க உள்ளோம். அவரது ஆலோசனைப்படி கலைஞர் நூலகத்தின் உள் அலங்காரப்பணிகள் நடக்கும்.
இந்தக் கட்டிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் 7 மாடியுடன் அமைகிறது. இதுபோன்ற பிரமாண்ட கட்டிடம் மதுரையில் அமையவில்லை. கன்னியாகுமரியில் ஆரம்பித்து தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து மாணவர்கள், பல்துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த நூலகம் பயன் உள்ளதாக அமையும். தற்போது கலைஞர் நூலகம் கட்டுமானப் பணியை பொறுத்தவரையில் 90 சதவீதம் முடிந்துள்ளது.
அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் மீதியுள்ள கட்டுமானப் பணிகள் முடிந்துவிடும். அதன்பிறகு தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உள் அலங்காரப் பணிகள், பர்னிச்சர் உள்ளிட்டப் பணிகள் விரைவாக முடிக்கப்படும். தமிழர்களின் கலாசார நகராக மதுரை புகழப்படுகிறது. மேலும், இந்த நகரத்தின் அருகில் கீழடி போன்ற பண்டை கால தொல்லியல் நகரமும் இருக்கிறது. அதுபோன்ற சிறப்புகள் இந்த நூலகத்திற்கு மகுடமாக அமைந்துள்ளது” என்றார்.
கலைஞர் நூலகம் என்பதால்தான் இவ்வளவு விரைவாக இந்த கட்டுமானப் பணிகள் நடக்கிறது. இதுபோன்ற மற்ற அரசு கட்டுமானப் பணிகள் விரைவாக நடக்குமா என்று எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்களே என்று கேட்டதற்கு, “முதலில் இதுதவறான கேள்வி. கலைஞரைப் பற்றியோ, தமிழக அரசைப் பற்றியோ முதல்வரைப் பற்றியோ அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ஒன்றை ஒன்று விஞ்சுகிற அளவிற்குதான் அரசு கட்டிடங்களை கட்டி வருகிறோம். இந்த கட்டிடம் மட்டுமில்லை மக்களுடைய அவசர தேவைக்கான கட்டிடங்களை இதுபோல் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விரைவாக கட்டி முடிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் முடித்த பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுமா என்று கேட்டதற்கு, “ஸ்மார்ட் சிட்டி திட்டம் எங்கள் ஆட்சியில் வந்தில்லை. அதிமுக ஆட்சி இருந்தபோது அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் அறிவித்தபோது உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகளே கிடையாது. இப்பணிகளை விரைந்து செய்வதற்குதான் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு நாங்கள் தயார் செய்யவில்லை. நாங்கள் வடிவமைக்கவில்லை” என்றார்.