கர்நாடக அரசியலுக்கு திரும்புகிறார்: மத்திய மந்திரி ஷோபாவுக்கு மாநில பா.ஜனதா தலைவர் பதவி?

பெங்களூரு: மத்திய மந்திரி ஷோபாவுக்கு மாநில பா.ஜனதா தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்குகளை கவர முடியும்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் நெருங்கி வருகிறது. அதனால் கர்நாடக பா.ஜனதா அமைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்ய அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீலை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபாவை நியமிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரை பா.ஜனதா தலைவராக நியமனம் செய்வதன் மூலம் பெண்கள் வாக்குகளை கவர முடியும் என்றும், அவர் சார்ந்துள்ள ஒக்கலிகர் சமூக வாக்குகளை அதிகமாக பெற முடியும் என்று மேலிடம் கருதுகிறது. மைசூரு மண்டலத்தில் பா.ஜனதா வலுவாக உள்ளது. அந்த பகுதியில் ஒக்கலிகர் சமூக வாக்குகள் தான் அதிகம். அதனை மனதில் வைத்து பா.ஜனதா மேலிடம் காய் நகர்த்த தொடங்கியுள்ளது.

எடியூரப்பாவின் ஆதரவாளர்

ஷோபா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வளர்ந்து பா.ஜனதாவுக்கு வந்தவர். அவர் அரசியல் ரீதியாக உறுதியான கருத்துகளை முன்வைப்பதில் பிரபலமானவர். ஒவ்வொரு பிரச்சினையிலும் எதிர்க்கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதில் வல்லவர் என்று பெயர் அவருக்கு உண்டு. அதனால் அவரை கட்சியின் தலைவராக நியமனம் செய்தால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று அக்கட்சி மேலிட தலைவர்கள் கருதுகிறார்கள்.

முதுநிலை பட்டம் பெற்றுள்ள அவர், எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது (2008-13) மின்சாரம், உணவு, கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக பணியாற்றினார். எடியூரப்பா கடந்த 2013-ம் ஆண்டு புதிய கட்சியை தொடங்கியபோது அதில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் உடுப்பி-சிக்கமகளூரு தொகுதி எம்.பி.யாக உள்ளார். கடந்த முறை மத்திய இணை மந்திரியாக பொறுப்பேற்று பணியாற்றி வரும் அவர் எடியூரப்பாவின் மிக தீவிரமான ஆதரவாளராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதுவும் தெரியாது

இதுகுறித்து மத்திய மந்திரி ஷோபாவிடம் கேட்டபோது அதற்கு அவர், “நான் கர்நாடக அரசியலுக்கு திரும்புவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்றார். சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஷோபா மீண்டும் கர்நாடக அரசியலுக்கு திரும்புவதாக வெளியாகியுள்ள தகவால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.